0

கதை விமர்சனம் – ஒரு கோடி டாலர்கள் …..கிருத்திகா

ஆழமான கருத்துகளை முன்வைத்து நம் சிந்தனையைத் தூண்டுகிறது எழுத்தாளர் மாதங்கியின் “ஒரு கோடி டாலர்கள்” என்ற சிறுகதைத் தொகுப்பு. சிங்கப்பூரைக் களமாகக் கொண்டு புனைந்துள்ள 17 சிறுகதைகள் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. 2012-ஆம் ஆண்டு சந்தியா பதிப்பகம் இந்தப் புத்தகத்தை 110 இந்திய ரூபாய்களுக்கு வெளியிட்டுள்ளது. இந்தத் தொகுப்பிற்கு ஒரு அருமையான கருத்துரையை திரு.இரா.கண்ணபிரான் அவர்கள் அளித்துள்ளார்.

ஒவ்வொரு கதையிலும் வெவ்வேறு விதமான நாயக, நாயகிகள். வாழ்வியல், அறிவியல் புனைக்கதை, கலாச்சாரம், ஒவ்வொரு வயதிலும் மனிதன் சந்திக்கும் சவால்கள் எனப் பல்வேறு கருக்களை தன் சிறுகதைகளுக்குள் அடக்கியிருப்பது மாதங்கி அவர்களின் வெற்றி. “ஒரு கோடி டாலர்கள்” என்ற தலைப்பு என்னைக் கவர்ந்ததாலேயே இந்தப் புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தேன். அதன் விளைவாக என்னுள் எழுந்த உணர்வுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

புத்தகம் படிப்பதை ஒரு வழக்கமாகக் கொண்டுள்ள என்னால் ஒரு நாளைக்கு ஒரு கதையை மட்டும்தான் படிக்க முடிந்தது. அந்த அளவிற்கு ஒவ்வொரு கதையும் என்னைத் தாக்கியது. மற்றொரு கதையை அன்றே படிக்க மனம் ஒப்பவில்லை. படித்த ஒரு கதையே அப்படி ஒரு திருப்தி அளித்தது. அதையே ஒரு நாள் முழுவதும் மனதிற்குள் உருப்போடுவேன்.

இந்த ரீதியில் பார்க்கும்பொழுது நகைச்சுவையையும் காதலையும்  பிரதானமாகக் கொண்டுள்ள திரைப்படங்களைப் பார்க்கும் வெகுஜன மக்களை இந்தப் புத்தகம் சென்று சேருமா என்பது ஒரு கேள்விக்குறி! அவசர கால யுகத்தில் 10 நிமிடம் ஏதோ படித்தோமா சிரித்தோமா என்று இருப்பவர்களின் மனதில் இந்தத் தொகுப்பில் உள்ள அருமையான  எண்ணப்பாய்ச்சலும் கற்பனையும் சென்று பதியுமா என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது. சிந்தனைகளைக் காதலிக்கும் வாசகர்கள் இந்தக் கதைகளைப் படித்துக் கண்டிப்பாக இன்புறுவர்.

இந்தத் தொகுப்பில் மாதங்கி அவர்களின் மொழிவளத்தைப் பாராட்டியே ஆகவேண்டும். இப்படியெல்லாம் கூட தமிழில் சொற்கள் சாத்தியமா என்று வாசகர்களை தனது சொல் பிரயோகத்தால் வியக்கவைக்கிறார். மெல்லோட்டப் பாதை, வெதுப்பகம், கவ்விகள், கட்டைத்திரை தொலைக்காட்சி, உலர்சலவை, சுத்தமாக்கி போன்ற சொற்களை எழுத்தாளர் மாதங்கிதான் உருவாக்கி புதிய அகராதியில் இடம்பெற வழிவகுக்கிறார் என்று என் சிற்றறிவிற்குத் தோன்றுகிறது. அவை ஏற்கனவே இருக்குமாயின், இவர்தான் தன் எழுத்துக்களில் அவற்றை உபயோகித்து மக்களிடம் கொண்டு சேர்க்கிறார் என்பதில் எனக்கெந்த ஐயமும் இல்லை.

சட்டதிட்டங்கள் என்று ஒரு வரைமுறைக்குள் இல்லாமல் எழுத்தாளருக்கு சிறுகதை சொல்லும் பாணியில் முழு சுதந்திரம் உள்ளது. அவரவர் தனித்தன்மையினாலேயே சிறுகதை எழுத்தாளர்கள் வாசகர்களை தங்கள்பால் இழுக்க முடியும். சிறுகதை படிக்கும் வாசகர்களுக்கும் அதே போல அவர்களுடைய வாழ்க்கை நிலை மற்றும் அனுபவங்களுக்கு ஏற்ற மாதிரி ஒவ்வொரு கதையைப் படிக்கும் பொழுதும் அதை புரிந்துணரும் சுதந்திரம் உண்டு. சில நிமிடங்களுக்குள் மனதில் ஒரு பிரளயத்தையோ அல்லது ஒரு உன்னத சிந்தனையையோ தோற்றுவிக்க ஒரு சிறுகதைக்கு சக்தி உண்டு. இதை “ஒரு கோடி டாலர்கள்” என்ற சிறுகதைத் தொகுப்பு ஒவ்வொரு கதையிலும் உறுதிப்படுத்துகிறது. ஒரு வாசகியாக என் மனதில் தோன்றிய காட்சிகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

வாழ்வின் கையாலாகாத தனத்தை சுட்டிக்காட்டுகிறது நான் முதலில் படித்த ‘கண்ணில் காண்பதெல்லாம்’ என்ற கதை. நாம் ஒருவர் மட்டும் உலகில் மாற்றம் கொண்டுவர எத்தனித்தால் போதாது, நம்மைச் சுற்றியுள்ள எல்லாவற்றையும் மாற்ற வேண்டியது அவசியம் என்று சொல்லாமல் சொல்கிறது இந்தக் கதை. அதே சமயம் நாம் ஒவ்வொருவரும் மாறினால், உலகமே மாறும் என்பதின் சாத்தியத்தையும் நம் கண் முன்னே கொண்டு வருகிறது. கதாநாயகி பிளாஸ்டிக் பொருட்களை உபயோகப்படுத்துவதை நிறுத்தவேண்டும் என்ற உத்வேகத்தில் வீட்டிற்குள்ளே தேடித்தேடி பிளாஸ்டிக் பொருட்களை அப்புறப்படுத்துகிறார். கதாநாயகியின் ஒவ்வொரு செயலும் சிந்தனையும் விவரிக்கப்பட்டுள்ள விதம் நாம் ஏதோ அந்தப் பெண்ணாகவே மாறிவிட்ட உணர்வைத் தருகிறது. அவருடைய மெனக்கெடலைப் படிக்கும் வாசகர்கள் கண்டிப்பாக சில நாட்களுக்கு பிளாஸ்டிக் பொருட்களை உபயோகிக்கத் தயங்குவார்கள். அப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது இந்தக் கதை. அதே சமயம் கதை முடியும் பொழுது அவரை அறியாமலேயே அவரிடம் வந்து சேரும் பிளாஸ்டிக் பூச்சட்டிகள் நமக்கு மட்டுமல்ல, அந்தக் கதாநாயகிக்கும் ஆயாசத்தை உருவாக்குகிறது. இப்படித்தானே நம்மைச் சுற்றிப் பல நிகழ்வுகள் நடக்கின்றன என்ற யோசனையை வாசகர்கள் மனதில் ஏற்படுத்துகிறது இந்தக் கதை. இது 2010 மார்ச் பூவுலகுவில் ஒரு சிறப்புச்சிறுகதையாகக் கருதப்பட்டது.

இதே பாணியில் உள்ளது ‘அந்த மலர்க்கூட்டம்’ என்ற சிறுகதை. தமிழ் முரசு மற்றும் திண்ணையில் வெளியானது இந்தக் கதை. பதின்ம வயதினருக்குத் தேவையான கவனிப்பும் ஊக்கமும் இருந்தால், அவர்கள் வாழ்க்கையில் முன்னேறுவார்கள் என்பதை நாம் நம்பும் வண்ணம் நடந்து கொள்கிறார் கதாநாயகி. தினந்தோறும் அடுக்குமாடி கட்டிடத்தின் கீழே கூடும் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் பெண்களுடன் தோழமையாகப் பேசி அவர்களின் தன்னம்பிக்கையை கதாநாயகி அதிகரிக்கச் செய்வதைக் கண்டவுடன் வாசகர்களுக்கும் நாமும் ஒரு மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறார் மாதங்கி. அந்த மாணவிகளுடைய குழந்தை மனதைக் கண்டு ஊக்குவிக்கும் கதாநாயகி தனக்கென்று அப்படி ஒரு சூழ்நிலை வரும்பொழுது இயல்பான செயலைத்தான் செய்கிறார். ஒரு நாள் கதாநாயகி தன் வீட்டிற்குள் நுழையும்பொழுது அவருடைய மகள் வெகுநேரமாக தொலைக்காட்சி பார்ப்பதைக் கண்டு ஒரு தாயாக அவளை அதட்டுவதைப் படிக்கும் நமக்கு சிரிப்புதான் வருகிறது. வீட்டிற்கு வீடு வாசப்படி!

என்னை வெகுவாகத் தாக்கியது 2010-ஆம் ஆண்டு உயிரோசையில் வந்த ‘தீர்வை’ என்ற  கதை. ஒரு பெண் மாவு தீரும் வரை தோசை சுட்டுக்கொண்டே இருக்கும் வழக்கத்தைக் கொண்டிருக்கிறாள் என்றால் அவளுக்கு எத்தகைய மனக்குழப்பம் ஏற்பட்டிருக்க வேண்டும். அமைதியாக இருப்பதால் அவளை புகுந்த வீட்டில் கணவன், மாமியார் என்று யாருமே ஒரு சக மனுஷியாகக் கருதவில்லை. அவளுக்கென்று உள்ள வேர்களை உரிமையுடன் நாசூக்காக பிடுங்கிவிட்டு வேலை செய்யும் ஒரு மனித இயந்திரமாக அவளை உழலவிடுகிறார்கள் அவளுடைய கணவனும் மாமியாரும். படிக்க படிக்க இந்த மாதிரி எத்தனை எத்தனை பெண்கள் எல்லா சமூகத்திலும் இன்னமும் வாழ்கிறார்களோ என்று என் உள்ளத்தை கொதிக்க வைத்து விட்டது. இதை கொஞ்சம் கூட உணராத அவளுடைய கணவன் மனவியல் மருத்துவரிடம் இந்தப் பிரச்சினையைக் கூறுகிறான். வெறுமனே கூறுகிறான், ஓர் தீர்வைக் கூட எதிர்ப்பார்க்காமல்.

என்னை சிரிக்க வைத்து கவர்ந்த கதை ‘விழிப்பு’. தமிழ் முரசுவில் வெளிவந்த இந்தக் கதையை ஏனைய வாசகர்கள் படித்திருக்கலாம். கதாநாயகன் பாலகுருநாதன் தூக்கமின்மையால் அவதிப்படுகிறான். ஒரு குழந்தையின் அருகாமை அதற்குத் தீர்வைக் கொடுக்கும் என்பதை ஆசிரியர் இந்தக் கதையில் அழகாக சித்தரிக்கிறார். தனியார் வீடுகளின் அமைப்பையும் கூட கதையின் போக்கிலேயே தன்னுடைய எளிமையான நடையில் விவரித்துள்ளார் கதாசிரியர். குழந்தையில்லாமல் துன்பப்படும் அவருடைய தங்கை ஒடுங்கிவிடாமல் ஒரு குழந்தையைத் தத்து எடுத்து பிரச்னைக்கு தீர்வு காண்கிறார். அதை குடும்பமே ஆதரித்துக் கொண்டாடுவதால், வாசகர்கள் மனதில் ஒரு சமுதாய மாற்றுச்சிந்தனை ஊடுருவ இந்தக் கதை வழி வகுக்கிறது. தங்கை ஓய்வெடுப்பதற்காக, தானே குழந்தையை தூங்க வைக்க பாலகுருநாதன் முன்வருவதும், பின்னர் அது எவ்வளவு பெரிய சவால் என்று புரிந்து தடுமாறுவதும் ரசிக்கக்கூடிய பகுதி. எத்தனை மணிக்குத்தான் அவர்கள் இருவரும் தூங்கினார்களோ என்று தெரிந்துகொள்ள உங்களுக்குள்ளும் ஆர்வத்தைத் தூண்டுகிறதல்லவா கதை? புத்தகம் உங்கள் கையில் கிடைத்தவுடன் நீங்கள் படிக்க வேண்டியது ‘விழிப்பு’ கதையைத்தான். மனதை இலேசாக்கி விடும் எழுத்துநடை. இரவு படுக்கையில் இந்தக் கதையைப் படித்த என்னை ஆழ்ந்த தூக்கம் தழுவியது கதையின் மகிமை என்று மறுநாள் காலை புரிந்தது.

அதைப் போலவே நம்மை கதைக்குள் இழுத்துச் செல்லும் மற்றொரு படைப்பு ‘தோழன் குறும்படமும் ஒரு பின்குறிப்பும்’ என்ற கதை. சிறுகதை தொகுப்பில் ஏன் ஒரு கட்டுரை இடம்பெற்றிருக்கிறது என்ற கேள்வியுடன்தான் நான் இந்தக் கதையைப் படிக்க ஆரம்பித்தேன். எதிர்பாராத விதத்தில் ஒரு கதை பின்னப்பட்டிருக்கிறது. ஆணென்ன பெண்ணென்ன, ஒருவருடைய தேவைக்கு, சவாலுக்கு மற்றவர் துணை கொடுப்பது தானே இல்லறத்தின் பண்பு என்பதை படிப்பறிவுள்ள இந்தத் தம்பதி செயல்படுத்துவது வாசகர்களின் மனதை இதமாக்குகிறது. ஒரு குறும்படமும் ஒரு சிறுகதையைப் போலவே எளிய மொழியும் ஒரு முக்கிய கருவைப் பின்னி சுற்றப்பட்டிருக்கும் கதையும் கொண்டிருக்கும் என்பதை அழகாக இதைப் படிக்கும்பொழுது உணரலாம். புலம் பெயர்ந்து வாழ்பவர்கள் வாழ்க்கையை நகர்த்த மேற்கொள்ளும் மாற்றங்கள் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை ஒரு சிறுவனுடைய உணர்வுகள் மூலம் சொல்வது போன்ற பாணியில் கதை விவரிக்கப்பட்டிருக்கிறது. அந்தக் குழந்தையின் தாய் தந்தையின் அன்பையும் உணர்வுகளையும் கூட யதார்த்தமாக முன் வைக்கிறார் ஆசிரியர். முடிவை வாசகர்களிடம் விட்டிருந்தால், அவர்கள் தூக்கத்தைத் தொலைத்திருப்பார்கள். அந்தச் சிரமத்தைத் தராமல் மாற்றுச் சிந்தனையை தோற்றுவிக்கும் படியான ஒரு நிறைவான முடிவைக் கொடுத்து கைத்தட்டலைப் பெறுகிறார் கதாசிரியர். இது அமரர் கல்கி நினைவுச் சிறுகதை போட்டி 2009-இல் பிரசுரத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு கதை.

‘6’ என்பது ஒரு கதையின் தலைப்பா என்ற குழப்பத்தில் படித்தால், கதையின் போக்கும் முடிவும் கூட என்னை மேலும் குழப்பியது. இந்தக் காலத்தில் கூட இந்த மாதிரி காரியங்கள் நடப்பது சாத்தியமா என்று நம்மை மனம் குமுற வைக்கிறார் கதாசிரியர். ஒரு குடும்பத்தலைவி எதிர்கொள்வது ‘காலை எழுந்ததில் இருந்து விரட்டும் குரல்கள்’. யோசித்துப் பாருங்கள்! ஒரு நிமிடம் மீண்டும் நிறுத்தி நிதானமாகப் படித்துப் பாருங்கள் ‘காலை எழுந்ததில் இருந்து விரட்டும் குரல்கள்’. இந்தக் குரல்களைக் கேட்டுக்கொண்டே யாரால் வாழ முடியும்? நம் கலாச்சாரத்தில் அம்மா என்பவள் கணவன் குழந்தைகள் மட்டுமல்லாமல் பேரன் பேத்தி வரை சேவை செய்பவள் ஆகிறாள். “அம்மா நண்பர் வீட்டு நிகழ்ச்சிக்கு போயிட்டு வாங்க”, “அத்தை, என் உடுப்புகளை சலவைக்கு கொடுத்துள்ளேன். மெயிடுக்கு நினைவுபடுத்துங்கள்”, “அம்மா, உங்களுக்கு மருத்துவ பரிசோதனை எப்போவென்று நானே சொல்வேன். சும்மா கேட்டுக்கிட்டே இருக்காதீங்க” “என்ன? என் தப்பைச் சுட்டிக் காட்டுறீங்களா?” என்று வேலைக்குப் போகும் தலைமுறையினரின் தாக்குதலில் ஆரம்பிக்கும் கதை கணவனின் தாக்குதலையும் உரையாடலில் காட்டும்பொழுதே ஆசிரியர் அந்த தாயாரின் மீது பரிதாபம் கொள்ளச் செய்கிறார்.

பணிப்பெண்ணுக்கு கூட உதவும் அந்தத் தாயாரின் மனப்பான்மையினால் அவருடைய அன்பான உள்ளத்தை படிப்பவர்கள் உணர வழி செய்கிறார் மாதங்கி. அவர் பெண்ணின் வீட்டில் இருக்கிறாரா அல்லது மகனின் வீட்டில் இருக்கிறாரா என்றே கதையில் சொல்லப்படவில்லை. எங்கேயிருந்தாலும் அவர் நடத்தப்படும் விதம் ஒன்றுதான். மாற்றமில்லை என்பதால் அது முக்கியமுமில்லை என்று விடும்பொழுது படிக்கும் எனக்கு வலிக்கிறது. அர்த்தமில்லாத இந்த வாழ்க்கையின் நிலையை இந்தக் கதையின் ஒவ்வொரு நிகழ்வும் நினைவுப்படுத்துகிறது. நிதானமாகச் சென்ற கதை அவர் தன் நண்பர்களைச் சந்திக்கும் இடம் இடுகாடு என்னும்பொழுது நம்மை அதிர வைக்கிறது. என்னே ஒரு எழுத்துப்பாணி என்று வியக்க வைக்கிறார் மாதங்கி. தமிழ் முரசுவில் ஏற்கனவே வெளிவந்த கதை இது.

‘தொல்படிவங்கள்’ என்ற கதையில் மட்டுமல்லாமல் எல்லா கதைகளிலுமே சிங்கப்பூரில் அனுதினமும் நடக்கும் சம்பவங்களை கதையில் இயல்பாகப் பொருந்துமாறு எடுத்துக்கூறுகிறார் மாதங்கி. காலாற நடப்பதற்காக செல்லும் சிவபாக்கியம் மின் தூக்கியில் செல்லாமல் ஐந்தாவது மாடியிலிருந்து படிகளிலேயே இறங்கி கீழ்த்தளம் வருகிறார் என்று கூறுவதில் கதையின் போக்கு மாறப்போவதில்லை. ஆனால், இந்த மாதிரி சின்ன சின்ன நடைமுறை செய்திகளைக் கதையில் சேர்ப்பதால் சிங்கப்பூரில் வாழ்பவர்களுக்கு தங்களுடன் கதையை சம்பந்தப்படுத்த முடிகிறது. அதே சமயம் வெளிநாட்டில் வாழ்பவர்கள் சிங்கப்பூரில் உள்ள வாழ்க்கை முறையைத் தெரிந்து கொள்ளவும் வழிவகுக்கிறது. அவர்களின் வீடு மற்றும் மகனின் அலுவலகம் உள்ள இடங்களின் பெயர்களைக் கூறுவதின் மூலம் சிங்கப்பூரின் வட்டாரப் பெயர்கள் படிப்பவர் மனதில் பதியலாம். நான் கூறுவது கதையில் சொல்லப்பட்ட முக்கிய கருத்தை நோக்கும் பொழுது மிகச் சிறிய விஷயம்தான்.

‘தொல்படிவங்கள்’ கதையில் பேரக்குழந்தையை அர்த்தங்கள் இல்லாத மெட்டுடன் உள்ள தாலாட்டு பாட்டு பாடி தூங்கவைக்கிறார் பாட்டி. பாட்டில் உள்ள தாளத்திலும் அவர் ஆடிக் காட்டிய அசைவுகளிலும் மயங்கி குழந்தை தூங்குகிறது. ஆனால், எல்லோரைப் போலவும் அவருடைய மகனும் தாயாருக்கு ஒன்றும் தெரியாது என்று உணர்த்தும் வண்ணம் ‘டஸ் புஸ்’ என்றில்லாமல் தன் அம்மாவை ஆங்கில ரைம்ஸ் பாடச் சொல்கிறான் அவன். அந்தத் தாயாரோ தன்னுடைய கூர்ந்து நோக்கும் இயல்பினால் ஒரு குற்றவாளியைக் கண்டுபிடிக்க காவல்துறையினருக்கு உதவுகிறார். அதனால் அவருக்கு நன்றி சொல்ல வீட்டிற்கு வந்த காவல் அதிகாரி தாயாரின் தாலாட்டு பாடலின் நயத்தையும் பெருமையையும் பாராட்டும்பொழுதுதான் மகனுக்கும் தாயாரின் அருமை புரிபடுகிறது. சிறார்களுக்கு உரிய நீதிக் கதை போல இருந்தாலும், எல்லோரையும் யோசிக்க வைக்கும் இந்தக் கதை 2006-இல் தமிழ் முரசுவில் வெளிவந்தது. .

இப்படி மனித குணங்களை ஆராயும் வகையில் உள்ள கதைகளின் நடுவில் அறிவியல் புனைவையும் அழகாகப் புகுத்தி ‘சிங்கப்பூர் 2086’, ‘புரு’ மற்றும் ‘ஓர் உன்னத தினம்’ என்ற கதைகள் எழுதப் பட்டுள்ளன.

நம்முடைய அடுத்த தலைமுறை இந்தியப் பெண்களுக்கு வீடு ஒரு சிறையாக இருக்காது என்பதைச் சுட்டிக்காட்டும் வகையில் உள்ளது வீட்டுச் சமையல் வழக்கொழிந்து, மக்கள் தானியங்கி இயந்திரங்களில் தங்களுக்குப் பிடித்த உணவு வாங்கிச் சாப்பிடுகிறார்கள் என்ற கற்பனை. இன்றளவில் ஏற்கனவே சிற்றுண்டிகளை  இயந்திரங்களில் வாங்கும் வசதி உள்ளது. ஆக இவருடைய கற்பனை நம் வாழ்நாளிலேயே சாத்தியமாகும் வாய்ப்புண்டு. இன்றைய சாத்தியக்கூறுகளை ஒட்டி அமைந்துள்ள புறச்செருகல் பாணி நல்ல உபயோகமான கற்பனை வளம் என்றே எனக்குத் தோன்றுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட வெகு சிலரே பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்துகொள்ள இயலும் என்பதை இந்தக் கதையில் படிக்கும்பொழுது மனம் வலிக்கத்தான் செய்கிறது. ஆனால், அந்த நாள் ரொம்ப தூரத்தில் இல்லை என்று நம்மை எச்சரிக்கையூட்டும் ‘சிங்கப்பூர் 2086’ என்ற இந்தக் கதை ‘தமிழ் நேசன் சிறுகதைப் போட்டியில்’ ஊக்கப்பரிசு பெற்றுள்ளது.

அதைப் போலவே இரண்டு விதத்தில் புதிய சிந்தனையுடன் உதித்துள்ள கதை ‘புரு’. ஒன்று அப்பாவைப் பார்த்து சொத்தை வாங்க வரும் பிள்ளைகள் ராக்கெட், ஏர் டாக்சி போன்ற அதிநவீன போக்குவரத்து சாதனங்களை உபயோகிப்பது. மற்றொன்று அப்பாவிற்கு இளமையைத் திருப்பிக் கொடுப்பதற்காகவும் தன்னுடைய கண்டுபிடிப்பை இரகசியமாக பரிசோதனை செய்வதற்காகவும் வந்திருக்கும் தொலைந்து போன அவருடைய மகனுடைய முயற்சி. அந்த முயற்சி வெற்றியாவது ஒரு பக்கம். ஆனால், பால் மாறிவிட்ட அவனை நூறாண்டுகள் கழிந்த உலகில் கூட குடும்பத்தில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று ஒரு கருத்தை ஆசிரியர் முன் வைத்திருப்பது ஏன் என்று ஒரு கேள்வியை எனக்குள் எழுப்புகிறது. இப்பொழுதே திருநங்கைகளை மூன்றாவது பாலினமாக ஏற்றுக்கொள்ள ஆரம்பித்துள்ளனர். ஆகையால், எதிர்காலத்தில் இது நியாயமான ஒரு ஏற்பாடாக இருக்கலாம். அதனால், மாதங்கி அவர்கள் அதை ஒரு சாதாரண நிகழ்வாகவே காட்டியிருக்கலாம் என்பது என் எண்ணம். கருத்துரையில் ‘XY’ மரபணுக்கள் இல்லாததால்தான் சிலர் திருநங்கைகளாக மாறுகிறார்கள் என்ற அறிவியல் காரணத்தை குறிப்பிட்டிருப்பது என்னைப் போன்ற பல வாசகர்களுக்கு ஒரு செய்தி. அதை சரியாகச் சுட்டிக்காட்டிய இரா.கண்ணபிரான் அவர்களுக்கு ஒரு பாராட்டு. காலங்கள் சென்றாலும் தமிழர்கள் பெற்றோரின் சொத்தைத்தான் குறிவைப்பார்கள் என்பது யோசிக்க வேண்டிய கருத்து. தன்மானம் மிகுந்தவர்களாகவும் பிறரை வருத்தாமல் இருப்பவர்களாகவும் தமிழர்கள் இருப்பார்கள் என்ற நம் நம்பிக்கையை அசைக்கிறது இந்தக் கதை. ஒருவேளை அது சாத்தியமாகாதோ?

‘ஓர் உன்னத தினம்’ என்ற கதையில் வேற்று கிரகத்து உயிரனம் பூமியை சரிப்படுத்த திருவாட்டி சந்திரிக்கா அவர்களை நேர்காணல் காண வருகிறது. ஆரம்பம் முதல் பூமியில் எந்தக் குறையும் இல்லை, மனிதர்கள் சுயமாகவே தங்களைப் பார்த்துக்கொள்வார்கள் என்று சாதிக்கிறார் சந்திரிக்கா. ஆகையினால், நிலாவை அவர்கள் பறித்துக்கொண்டு பூமியை அழிக்கத் தேவையில்லை என்கிறார். சிங்கப்பூரில் சுகமாக இருக்கும் தனக்கு இந்த வாழ்க்கை சரி. ஆனால், பிற நாடுகளில் உள்ள சண்டை, அணுகுண்டு வீச்சுகள், பஞ்சப் பரதேசித்தனம் போன்றவற்றை எண்ணும்பொழுது பூமியே வேண்டாம் என்று கடைசியில் யோசிக்கத் தலைப்படுகிறார் சந்திரிக்கா. பூமியின் நிலாவை வேற்று கிரகத்து மனிதர்கள் எடுத்துச்செல்வார்கள் என்பது தற்காலத்தில் சாத்தியமே இல்லாத நல்ல கற்பனை. ஆனால், இந்த மாதிரி கதை என்னைப் போன்ற வாசகர்களை கொஞ்சம் குழப்பவே செய்கிறது. இது அமுதசுரபியில் 2010-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சிறந்த கதையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

சில கதைகள் சாதாரண நிகழ்வுகளைக் கொண்டு பின்னப்பட்டிருந்தாலும் நம்மை யோசனையில் ஆழ்த்துகிறது. ‘சாதாரண மனிதன்’ என்ற கதையில் சரும வியாதி உள்ள ஒருவரைப் பார்த்து அந்தப் பெண் பழகப் பயப்படுகிறாள். அவளுடைய மகளோ அவனைச் சாதாரண மனிதனாகப் பார்த்துச் சிரிக்கிறாள். குழந்தைகள் எந்த சார்பும் இல்லாமல் இருக்கிறார்கள் என்பதை இயல்பாக இந்தக் கதையில் சொல்கிறார் மாதங்கி. பின்னர் அவள் அவனிடமே இளநீர் வெட்ட உதவி கேட்கும் சந்தர்ப்பத்தில் அந்த இளைஞன் என்ன செய்கிறான் என்பதே கதையின் முடிவு. 2010-ஆம் ஆண்டு உயிரெழுத்தில் வெளிவந்த கதை இது.

‘பயன்பாட்டில் இல்லாத மிதிவண்டி’, ‘அவன்’, ‘எஃப் கெ லிம் இன் மூன்றாவது கண்’, ‘மர்ஃபி விதி’, ‘புரை’  போன்ற கதைகளில் வழக்கமாக நம் வீடுகளில் நடப்பதைப் பார்க்கலாம்.

பள்ளிக்குச் சென்ற ஒரு உயர்நிலைப் பள்ளி மாணவியைக் காணவில்லை என்று ஆசிரியர் தெரிவித்தவுடன் மகளின் மேல் நம்பிக்கை வைத்து அவளைத் தொடர்புகொள்ள முயல்கிறார் அம்மா, பொறுப்பை ஏற்றுக்கொள்ள இயலாத அப்பாவோ தீர்வை யோசிக்காமல் அந்த இரு பெண்களையும் குற்றம் சாட்டுகிறார். ஆண் பேரினவாதத்தை சார்ந்திருக்கும் அவனைப் போன்ற ஆண்கள் மாறுவதற்கு இன்னும் எத்தனை பெரியார்களும் பாரதிகளும் தோன்ற வேண்டுமோ தெரியவில்லை. உண்மையில் நூலகத்தில் அசதியால் தூங்கிவிட்ட பெண் பத்திரமாக வீடு திரும்புகிறாள். அதே சமயம், ஆண் பென்குயின் முட்டையை பாதுகாப்பதை ஒரு குறும்படத்தில் பார்த்து தன் குடும்பத்தில் ஒரு நல்ல மாற்றத்தை கொண்டுவர விரும்பும் ஒரு ஆணை ‘அவன்’ என்ற சிறுகதையில் பார்க்கலாம். அது நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. ‘மர்ஃபி விதி’ என்ற கதையில் ஒரு சாதாரண இந்திய ஆண்மகனின் எண்ண ஓட்டத்தைப் பார்க்கலாம். தங்கையோ தோழியோ படித்த கருத்தாழம் உள்ள பெண்ணாக இருக்கலாம். ஆனால், மனைவி என்பவள் தனக்குக் கீழே படித்தவளாக, தன்னைச் சார்ந்துள்ளவளாக இருக்க ஆசைப்படும் ஒரு சாதாரண ஆணை, அவனை ஆராய்ந்து பார்க்கும் அவனுடைய நண்பனின் பார்வையில் இந்தக் கதை எடுத்துக்காட்டுகிறது.

‘பயன்பாட்டில் இல்லாத மிதிவண்டி’ என்ற கதையில் பல காலம் உழைத்து தான் அகற்றப்பட காத்திருக்கும் ஒரு மிதிவண்டியின் பார்வையில் கதை நகர்கிறது. சில மனிதர்களுக்கு வாழ்க்கையின் இறுதி கட்டம் இது போல அமைவதை நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது இந்தக் கதை. ‘எஃப் கெ லிம் இன் மூன்றாவது கண்’ என்ற கதை வாழ்ந்து முடிந்த மனிதர்களைப் பார்க்கும் சக்தி கொண்ட சீனர் லிம் என்பவரின் வாழ்க்கையை கருவாகக் கொண்டுள்ளது. நம்மை தொந்தரவு செய்யாத ஆவிகள் உண்மையிலேயே இருக்கும் என்ற உணர்வை ஏற்படுத்துகிறது இந்தக் கதை. எல்லா கதைகளிலும் இந்தியர் அல்லாத பிற இன கதாப்பாத்திரங்களை புகுத்தி இருக்கும் மாதங்கி, இந்தக் கதையில் ஒரு சீனரை கதாநாயகனாகவே உருவகப்படுத்தி விட்டார்.

எல்லாவற்றிலும் முக்கியமான கதையாக வருவது ‘ஒரு கோடி டாலர்கள்’ என்ற சிறுகதை. இந்தத் தொகுப்புக்கு இந்தக் கதையின் தலைப்பையே ஆசிரியர் சூட்டியிருப்பதால், தொகுப்பின் கடைசியில் இடம் பெற்றுள்ள இந்தக் கதையை ஆர்வத்துடன் படித்தேன். மனிதாபிமானம் உள்ள ஒரு கணவன், பணமே குறிக்கோளாகக் கொண்டுள்ள ஒரு சுயநல மனைவி, இவர்களைச்சுற்றி பிறந்துள்ள கதை இது. தங்கச் சுரங்கம் என்ற கணினி விளையாட்டை விளையாடுகிறான் கதாநாயகன் என்றே கதை ஆரம்பிக்கிறது. கணவனின் மெல்லிய உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்காத மனைவியின் பிம்பம் சிறுசிறு நிகழ்வுகளில் காட்டப்படுகிறது. அப்படிப்பட்ட மனைவியுடன் வாழ்வது அர்த்தமில்லை என்பதாலேயே அவன் கணினி விளையாட்டின் உலகத்துக்குள் நுழைந்து ஆபத்தான வேலையை மேற்கொள்கிறான் என்றும் எண்ணலாம். அல்லது அவனுடைய மனிதாபிமானத்தில் ஒரு சிறுமியையும் அவளுடைய பாட்டனுக்கும் தன்னாலான உதவியை செய்ய முனைந்து சொந்த விருப்பில் பாதாளத்தில் வேலை செய்ய முனைகிறான் என்றும் எண்ணலாம். என்னால் தீர்மானமாகச் சொல்ல முடியவில்லை. 20 நிலைகள் கொண்ட அந்த விளையாட்டில் ஒவ்வொரு நிலையாக அவன் தாண்டிச் செல்லும்பொழுது அவனுடைய சொந்த வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளை கதை பேசுகிறது. 20-ஆவது நிலைக்குச் சென்றுவிட்ட அவனுக்கு அதை வென்றால் ஒரு கோடி டாலர்கள் வெகுமதி. அவன் வெல்வானா என்பதை தெரிந்துகொள்ள ஆரம்பத்தில் இருந்தே நம்மை நாற்காலியின் நுனியில் உட்கார வைக்கிறது காலச்சுவடில் 2011-ஆம் ஆண்டு வெளிவந்த இந்தக் கதை. சில முறை படித்தும் இந்தச் சிறுகதை எனக்கு ஒரு முழுமையான புரிந்துணர்வைக் கொடுக்கவில்லை. ஆரம்பத்தில் சொல்லியதுபோல மாதங்கியின் கதைகளை சும்மாவேனும் படித்து புரிந்துகொள்ள முடியாது. தற்கால நடைமுறை பற்றிய அறிவும் இளையர்களைப் போல ஒரு சிந்தனையோட்டமும் தேவையென்று நினைக்கிறேன்.

புத்தகத்தின் வடிவமைப்பில் ஒரே ஒரு குறை. பொருளடக்கத்தை எண்களிட்டு ஒன்றன் கீழ் ஒன்றாகக் கொடுத்திருக்கலாம். எத்தனை முறை பார்த்தாலும் ஒரு பத்தி போன்ற அமைப்பில் இருக்கும் பொருளடக்கம் எனக்கு குழப்பத்தைத்தான் தருகிறது.

இந்தத் தொகுப்பில் சமூகத்தை சீரழிக்கும் குற்றவாளிக் கதாபாத்திரங்கள் இல்லை. அதனால், வன்மமும் வஞ்சகமும் சூழ்ச்சியும் இல்லை. அவரவர் சூழ்நிலைக்கு ஏற்ப தத்தம் வீடுகளில் தம்மை அறியாமலேயே மனித நேயத்தை தவற விடுபவர்கள்தான் சித்தரிக்கப்படுகிறார்கள். இந்த இயல்புகளைப் படிக்கும் பொழுது அது நம்மையோ, நமக்குத் தெரிந்த ஒரு நண்பரையோ அல்லது உறவினரையோ ஞாபகப்படுத்தும். சம்பந்தமில்லாத வில்லன்கள் இவருடைய கதைகளில் இல்லையாதலால் படித்து முடித்தபின் வாசகர்கர்களை ஒரு கொடுங்கனவில் கதைகள் ஆழ்த்தவில்லை. அதனால், இந்தத் தொகுப்பை நான் எத்தனை முறை வேண்டுமானாலும் படிக்கத் தயாராக உள்ளேன். ஆழ்ந்த கருத்துகளை உள்வாங்கக் கூடிய நண்பர்களுக்கு இந்தத் தொகுப்பை படிக்குமாறு பரிந்துரைக்கவும் தயாராக உள்ளேன்.

Filed in: மாத இதழ்

Recent Posts

Bookmark and Promote!

Leave a Reply

Submit Comment