1

தாயம்

இந்த சிறுகதை தமிழ்முரசு பத்திரிக்கையில் வெளிவந்தது. திரு.ஷானவாஸ் அவர்களின் எழுத்துக்கள் என்றுமே நிறைய புது விசயங்களை தன்னுள் அடக்கியதாகவே இருக்கும்..இந்த சிறுகதையும் பல புதிய தகவல்களை உள்ளடக்கியிருக்கிறது. “சொக்கட்டானின்”அர்த்தம் தெரிந்துகொள்ள படிக்க ஆரம்பியுங்கள் “தாயம்

இக்கதை குறித்த  திரு:பனசை நடராஜன் அவர்களின் விமர்சனம்  

வணக்கம் சகோதரரே..

நேர்த்தியான, நெகிழ வைக்கும் கதை. இது போன்ற நமது சூழலுக்கு உகந்ததும், படிக்க களைப்பில்லாத கதைகளுமே உங்களது பலம் என பல முறை சொல்லியிருக்கேன். நஸீர் பாய்க்கும், ஆனந்துக்குமான நட்பு பூப்பதும் வளர்வதும் இயல்பாக எழுதியிருக்கிறீர்கள். நஸீர்பாயின் மகள் ஏன் வாழாவெட்டியானாள் என்பதை இன்னும் சற்று வாசகனுக்கு விளக்கியிருக்கலாமெனத் தோன்றியது. மொத்தத்தில் தலைமுறை இடைவெளியென்பது கற்பனையானக் கோடுதான் என்பதை அழுத்தமாக சொல்கிறது தாயம் கதை. வாழ்த்துகள்.

அன்புடன்

பனசை நடராஜன்

கதையின் தலைப்பு : தாயம்
எழுதியவர்                   : திரு. ஷானவாஸ் அவர்கள்
shanavas

தாயம்

இதுவரை இரண்டு வீடு மாறி இது எனக்கு மூன்றாவது வீடு. ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு பிரச்சனை. வீடு என்று நான் சொல்வது தனி வீடு அல்ல. நான் வாடகைக்கு இருந்த வீடுகள், ஒரு மாஸ்டர் பெட்ரூம், அநேகமாக எல்லா வீடுகளிலும் வீட்டுச் சொந்தக்காரர்களே வைத்துக் கொள்வார்கள். உபரியாய் இருக்கும் அறைதான் வாடகைக்குக் கிடைக்கும்.

நிரந்தரவாசி, நல்ல கம்பெனி, நான்கு இலக்க சம்பளம், ஆனால் கட்டை பிரம்மச்சாரி, திருமணத்திற்கு தயாராகும் போது வீட்டைப்பற்றி யோசித்து கொள்ளலாம் என்று நினைப்பவர்களுக்கு வாடகை வீடுதானே சாய்ஸ்.

ஒரு வீட்டில், அந்த வீட்டுக்கு சொந்தக்காரர் ஐந்து மணிக்கே எழுந்து விடுவார். அந்த அகால நேரத்தில் வாக்கிங் போவதற்கு நான் தான் அவருக்கு கம்பெனி. ”அறுபது வயதில் வேகமாக நடந்தால் மூச்சு வாங்குகிறது ஆனந்த், ஹார்ட் பம்பிங் குறைகிறதோ” என்று வேறு கேட்டுக் கொண்டே நடப்பார். என்னால்  அவருடன் வாக்கிங்கை நீண்ட நாட்கள் தொடரமுடியவில்லை. அந்த வீட்டை விட்டுக் காலி செய்த போதும் அதிகாலையில் எழும் பழக்கம் என்னை விடவில்லை.

இன்னொரு வீடு சீனர் வீடு. இருக்கும் சின்ன ஹாலில் பியானோ வாங்கி வைத்திருந்தார். தினமும் பியானோவைத் தொடாமல் அவருக்கு நாள் கழியாது. நடுக்கட்டையில் ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக வேகமெடுக்கும்போது பெரிய ஹாலில் வைத்து வாசிக்க வேண்டிய பியானோ, சத்தம் வெளியே போக வழியின்றி வீட்டின் சுவர்களிடமும், கண்ணாடி ஜன்னல்களிடமும் மோதிமோதி எதிரொலிக்கும். கொஞ்ச நாட்களில் பியானோ சத்தம் கேட்காவிட்டால் காப்பி குடிக்காவிட்டால் மூளை மந்துனு இருக்குமே அதுமாதிரி ஆகிவிடும்.

இப்போதுள்ள வீட்டில் பூட்டிய கதவை திறக்கவே மாட்டார்கள். நான் காலையில் வேலைக்கு புறப்பட்டு செல்லும்வரை வீடு எந்த சலனமும் இல்லாமல் இருக்கும். இரவிலும் நடுநிசிக்கு மேல்தான் கணவனும் மனைவியும் வீடு திரும்புவார்கள். காண்டோமேனியம் ஒவ்வொரு நாளும் செக்யூரிடி வாயிலில் இவர்களுக்காகவே கேட்டைத் திறந்து வைத்து கொண்டிருப்பார்கள்.

நான் வேலை முடிந்து வரும்பொழுது  வாரத்தில் மூன்று நாட்கள் எப்படியும் தம்பதிகள் இருவரையும் பார்த்துவிடுவேன் இல்லை அவர்கள் என்னை பார்க்காமல் தூங்க செல்லமாட்டார்கள் எப்போதோ நான் ஒரு குத்துமதிப்பாக நான்கு இலக்க எண் சொல்லப்போய் அது முதல் பரிசில் வந்து நிற்க  வாரா வாரம் என்னிடம் நம்பர் கேட்பதை அவர்கள் விடுவதாக இல்லை.

எல்லோரும் லிப்டுக்குள் அவசரமாக புகுந்து கொண்டு ஏதோ இரவையும் பகலையும் விடாமல் துரத்திப்பிடிக்க ஒடிக்கொண்டிருக்கும் போது நின்னு நிதானித்து பேசுவதற்கு ஒருத்தர் கூட இல்லையோ என்பது மாதிரி  எனக்கு வெறுமையாய் இருக்கும். கிட்டத்தட்ட இங்கு குடிவந்து இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.

அடையாளம் தெரிகிற ஆட்கள் இல்லாவிட்டாலும், மூன்று குருவிகளை நான் பார்க்கத் தவறியதே இல்லை. ஐந்தாவது மாடி ஜன்னலில் விர்ரென்று பறந்து ஒன்றையொன்று துரத்திக் கொண்டும்,
விளையாட்டை யாராவது பார்க்கிறார்களா என்ற எண்ணமெல்லாம்  இல்லாமல் முறை வைத்து ஜன்னலில் அமர்ந்து பறந்து, விளையாட்டு முடிந்தவுடன், அவைகள் விடை பெரும்போது  எழும் ஒரு சிறு கேவலைக்கூட நான் அவதானித்திருக்கிறேன்.

காண்டோ செக்யூரிட்டிகளுக்கு எட்டு மணிக்கு மேல் அரை மணி நேரத்திற்கு ஒரு முறை வரும் கார்களுக்கு கேட்டைத்திறந்து விடுவதைத்தவிர வேறு ஒன்றும் வேலை இல்லாததால்  ஒரு பலகையில் சதுரவடிவில் கட்டங்கள் போட்டு சொக்கட்டான் விளையாடிக் கொண்டிருப்பார்கள். விளையாட்டு மும்முரத்தில் கேட்டில் கார் வந்து  நிற்பதை தாமதமாய் பார்த்து, யாராவது ஒருவர் எழுந்து ஓடிவருவர்.

எதிரே உள்ள காலியிடத்தில் கட்டிடம் கட்டுவதற்கு தட்டுமுட்டு சாமான்களை கொண்டு வந்து  கொட்டிக்கொண்டிருந்தார்கள். காம்பவுண்ட் சுவர் எழுப்பியவுடன்  வேலை ஆரம்பிக்கிறதோ இல்லையோ, முதல் வேலையாக ஒரு காவலாளியை கொண்டு வந்து ஸ்டூல் போட்டு உட்கார வைத்துவிட்டார்கள்.

காலையில் இரண்டொரு தினங்கள் கடந்து செல்லும்போது அந்தப் பெரியவரிடம் எனக்குப் பேசத் தோன்றியது. எண்பது வயது அல்லது அதற்கு சற்றுக் கூடுதலாகவும் இருக்கலாம். வீசி நடக்க இயலாமல் கால்களைத் தரையோடு நகர்த்தி நகர்த்தி நடக்கிறார். வட்டக் கண்ணாடி, அடர்த்தியான நரை மீசை, ஒதுங்கும் சிரிப்பு என்று என் தாத்தா ஜாடையில் இருந்தார். ஒரு வேளை அதற்காகவே  எனக்கு பேசத்தோன்றியதோ என்னவோ.

எந்த முகமனும் சொல்லாது கைகளின் தூக்கலில் அடக்கமாக வணக்கமும் இல்லாமல், ஹாயும் இல்லாமல் இடைப்பட்ட வெளியில் முகமன் சொன்னேன். அதை அவர் ஏற்றுக் கொண்டார். கண்களில் ஆச்சரியம் தெரிந்தது.  இப்படியே நாளுக்கு நாள் புன்னகை விசாலமடைந்து அவருடைய சட்டையில் குத்தியிருந்த பெயரைப் பார்த்து ”நஸீர்பாய் எப்படி இருக்கீங்க” என்று சொல்ல ஆரம்பித்தேன்.

ஒரு கையில் ஊன்றிய கம்பு இன்னொரு கையில் உள்ள பையில் ஏதாவது உணவு சாப்பிட வீட்டிலிருந்து கொண்டு வந்திருப்பார் என்று நினைத்துக் கொள்வேன். இரண்டையும் எங்கும் போகவிடாமல் பக்கத்திலேயே வைத்திருப்பார். அவர் யார், என்ன வேலை பார்த்து ஓய்வு பெற்றவர், குழந்தைகள் இல்லையா, மனைவி இருக்கிறார்களா என்பதை அறிவதற்கு எனக்கு இரண்டு நாட்களே போதுமானதாக இருந்தது. அவருடைய வீடு கூட ஒரு  மூன்று பளாக் தள்ளித்தான் இருக்கிறது. அவரிடம் என்னால் பேச முடியும் நேரம் இரவு எட்டு மணி. இது தினமும் தொடர ஆரம்பித்தது. வேலை முடிந்து நஸீர்பாயைப் பார்க்காமல் ஏதாவது அவசரத்தில் வீடு திரும்பும் போது என்னவோ வெறுமையாக இருக்கும்.

”தம்பி, தமிழ் புத்தகங்கள் படிப்பீர்களா”

”எங்கே பாய் நேரம்,  வேலை டென்ஷனில் அதெல்லாம் கஷ்டம் பாய்”

”நாம தான் தம்பி நேரம்  ஏற்படுத்தனும்”

இப்படியே அவர் பேச ஆரம்பித்து முடிக்கும் போது ஏதாவது தமிழில் புதிய சொல், அதற்கு விளக்கம் என்று என்னைக் கொண்டு வந்து நிறுத்தி விடுவார். அவர் கேட்டு கொஞ்ச நாட்களில் அர்த்தம் தெரிந்து சொல்கிறேன் என்பேன்.

”ஏன் தம்பி, அதுதான் கூகுள் இருக்கிறதே, அதில் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்” என்பார்.

செயூரிட்டிகள் சொக்கட்டான் விளையாடுவதை  நஸீர் பாயும் நானும் எங்களுக்குள் பேசிக்கொண்டே வேடிக்கை பார்ப்போம். அப்போது நஸீர் பாய்

”சொக்கட்டான் என்றால் என்ன அர்த்தம் தம்பி. அது காயா, கல்லா அல்லது ஒரு பொருளா”

”இதெல்லாம் கூகுளில் கஷ்டம் பாய், நூலகத்திற்கு செல்லாத என்னை அங்கு செல்ல வைத்துவிடுவீர்கள் போலிருக்கிறதே”

”ஆனந்த் தம்பி. சின்ன வயதில் பார்வதினு ஒரு பொண்ணு, நானும் அவளும் கம்போங்கில் இருந்த போது “மாஸாக் மாஸாக்” விளையாட்டு  விளையாடுவோம். அதாவது அம்மா, அப்பா விளையாட்டு. எல்லாக் காசையும் செலவழிச்சுட்டு கணக்குத் தெரியாமல் திணறுவேன். என்னை அப்போது என்ன பெயரில் தெரியுமா அந்தப் பெண்  கூப்பிடும் ”ஓட்டக் கை”. என் மனைவியிடம் ஏதோ ஒரு நேரத்தில் இந்தக் கதையை சொல்லப் போய், அவள் கிடைக்கிற சந்தர்பங்களில் எல்லாம் என்னை “ஓட்டக் கை “ என்றே சொல்ல ஆரம்பித்தாள். வாழ்வில் எல்லோருக்குமா கெட்டிக்காரத்தனம் வாய்க்கிறது. அது மாதிரி கெட்டிக்காரத்தனமும் அதிர்ஷ்டமும் எனக்கெல்லாம் வராது.இந்த கட்டிடத்திற்கு ஒரு சூப்பர்வைஸர் வருவான் தம்பி. ஓட்டக்கை அல்ல கணக்குப் பார்த்து செலவழிப்பான்.  ஆனால் கணக்கு பார்த்து குதிரை விளையாட்டு விளையாடிவிடுவான் விட்டில் மனைவியிடம் எப்போதும் தகராறு. உங்களுக்கு அந்தப் பழக்கம் இல்லையே தம்பி,”

”இல்லை பாய் நான் குதிரை ஓடுவதை பார்த்ததோடு சரி”

அவரிடம் பழக பழக பல ஆச்சரியங்கள் சிறுக சிறுக விரிந்தன.ஒரு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை எடுத்திருக்கிறேன்.

”ஆனந்த் தம்பி என்வீட்டுக்கு வாருங்கள்” என்று அழைத்தார்.

ஞாயிற்றுக் கிழமைதான் பல திட்டங்கள் போட்டு நெருக்கடியாக்கி வைத்துக் கொள்வேன். ஆனாலும் அவர் பேச்சை தட்ட முடியவில்லை. சரியாக பத்துமணிக்கு போனில் அழைத்துவிட்டார். அவரைக் கீழே இறங்கி வரவேண்டாமென்று சொல்லி நானே யூனிட் நம்பர் கேட்டு வீட்டுக்குப் போய்விட்டேன்.

எப்போதும் யூனிபார்மில் பார்த்த நஸீர்பாய் பளிச்சென்று கையில்லா முண்டா பனியனுடன் வரவேற்றார். அவர் மகளையும் அறிமுகப்படுத்தினார். பேத்தி பெயர் நஸரீன், மூன்று வயது துறுதுறுவென்றிருந்தது. அவர் வாங்கிக் கொண்டு வந்திருந்த கீரைகளைக் காதில் செறுகிக் கொண்டு பறவை மாதிரி  பறந்து கொண்டு ஓட்டம் காட்டிக் கொண்டிருந்தது.

நஸீர்பாயிடம் “நன்னா, இது யாரு  இது யாரு” என்று யாரென்று சொல்லிய பிறகும் திரும்ப திரும்ப என்னை யாரென்று கேட்டுக் கொண்டிருந்தது. அவர் மகள் சமையலையும் பார்த்துக் கொண்டு தன் மகளையும் ”மாமாவை தொந்தரவு செய்யக்கூடாது” என்று அதட்டிக் கொண்டிருந்தார்.

நஸீர்பாயிடம் ”உங்கள் மருமகன் என்ன வேலை” என்று தொடங்கினேன். கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தவர் அவர் அறைக்குள் சென்று ஒரு போட்டோ எடுத்துக் கொண்டு வந்து காண்பித்தார்.

“இவன் எப்படி மிடுக்கா இருக்கானு பார்த்தீங்களா தம்பி.”

நான் முதலில் கேட்ட கேள்வியை அடுத்து அவர் தொடரவே இல்லை. எதையும் கவனமாகக் கேட்டு  புள்ளி விவரமாக பதில் சொல்லும் நஸீர் பாய் தன் மருமகன் பற்றி எதுவும் என்னிடம் கூற விரும்பவில்லை என்று தெரிந்து கொண்டேன்.

“நஸீர் பாய் உங்கள் மருமகன் இங்கு தானே இருக்கிறார்” என்றேன்.

”தம்பி இந்தப்படத்தில் என்  மருமகனுடன் இருக்கிறான் பாருங்கள். குள்ளமாய் ஒருத்தன் அவன் என் பால்ய சிநேகிதன் அதோடு எனக்கு ஒன்றுவிட்ட சகோதரன். என் சிறுவயதில் எப்போதும் தெம்பூஸ் கட்டையில் செய்த வில்லோடுதான் அவன் அலைவான். எனக்கும் சில தடவைகள் வில் செய்து கொடுத்திருக்கிறான். சைக்கிள் ட்யூபை சீனர் கடையில் வாங்கி சரியாக 8 இன்ச் வார் எடுத்து கவட்டைகளிள் வரிவரியாகக் கட்டும் போது அவ்வளவு தொழில் நேர்த்தியோடு செய்வான். வில் தயாரானவுடன், எங்கேடா எறும்பு புற்று இருக்கிறது என்று பார்ப்பான். புற்றைத் தேடி குறிபார்த்து அடித்தால் தான் அவனுக்கு திருப்தி. புற்று வெடித்து சிதறி எறும்புகள் சாரை சாரையாக வெளியேறும் போது தண்ணீர் வழிந்து ஓடுவது மாதிரி இருக்கும். அந்தப் பயதான் எங்களுடைய குடும்பத்தையும் கலைத்து  இந்த நிலைக்கு கொண்டு வந்துவிட்டான் தம்பி”.

எனக்கு மிகவும் வேதனையாகிவிட்டது. மகள் வாழா வெட்டியாக இருக்கிறாள். இந்த வயதில் இரவெல்லாம் காவல் வேலைக்கு செல்லும் நஸீர்பாய் மேல் மிகுந்த கரிசனம் ஏற்பட்டது. வேதனைகளை மறைத்துக் கொண்டு பழைய நினைவுகளை ஒரு சொல் கூட மறக்காமல் அவர் மீட்டெடுத்து என்னிடம் சொல்வதை ரசித்தாலும் மனதில் வேதனையோடு அவர் வீட்டு பிரியாணியை சாப்பிட்டேன்.

அதற்குப் பிறகு எல்லா ஞாயிற்றுக்கிழமைகளில் பேத்தியைக் கூட்டிக்கொண்டு வந்துவிடுவார். மூன்று வயது நஷ்ரீனின் பேச்சும் விளையாட்டும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையையும் எனக்கு சந்தோஷமானதாக மாற்றிவிட்டது. தலையில் மாட்டியிருக்கும் ரப்பர் பேண்டை கழற்றி எடுத்து வளையாலாக்கி, ”அங்கிள் நான் பெரியமனுஷி ஆகிவிட்டேன்” என்று அப்படியே நடந்து காண்பிப்பது,
ஒரு தடவை நான் ஒன்றை இரண்டாக்குவேன் என்று சொல்லி என் குறிப்பு நோட்டை இரண்டாகக்கிழித்து அதிரவைத்தாள் .

இந்த ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் ஆட்காட்டிக் குருவிகள்  என் கண்ணில் படுவதேயில்லை. ஜன்னல் வழி நஸீர் பாயை பார்த்தேன். வெயிலின் உக்கிரத்திலும் அசையாமல் உட்கார்ந்திருந்தார். அவருக்கு வாய்த்த மருமகனாவது நல்ல மனிதனாக வாய்திருக்கக்கூடாதா?.

”அங்கிள் லிப்டில் நானா போயிருவேன்”

”நோ நோ அங்கிள் வருவேன், அது சரி அம்மாகிட்டே என்ன சொல்வே? மாமாவோட விளையாண்டேன்னு சொல்லுவியா”.

”ஆமாம் அப்படித்தான் சொல்வேன் அங்கிள் நீ என்னோட விளையாண்டதை யார்கிட்ட சொல்வே உங்க அம்மா எங்கே” என்று திருப்பிக்கேட்டது.

நான் ஒரு தடவை கூட அந்தப்பிஞ்சு குழந்தையிடம்  அத்தா வாப்பா டாடி என்று கேட்டு வைக்கவில்லை அந்த சொல்லுக்கு உரியவர்கள் இருந்தால் பரவாயில்லை, அதனால் அதில் கவனமாக இருந்தேன்.
நஸீர் பாய் அடிக்கடி சொல்வார் “மனிதனுக்கு பிறப்பு எப்படியோ அப்படித்தான் இறப்பும் ஒரு உலக நியதி. பிறப்புக்கும் இறப்புக்குமான சிறு இடைவெளியில் வேண்டுமானால் நம் வாழ்க்கையை நாம் தீர்மானித்துக் கொள்ளலாம். ஆனால் நம் தொடக்கமும் முடிவும் எப்படி என்பதை கடவுள் என்ற ஒருவர் தீர்மானிக்கிறாரோ இல்லையோ கண்டிப்பாக நாம் தீர்மானிப்பதில்லை! என்று.

ஒரு வாரம் வெளியூர் போய்விட்டு வந்து நஸீர் பாய்க்கு போன் செய்தேன். பதில் இல்லாமலிருந்தது. வேலைக்கும் வரவில்லை என்று சொன்னார்கள் . மிகுந்த யோசனையுடன் கம்பெனி வேலையாக வெளியூர் போய்விட்டு, மூன்று நாட்கள் கழித்து வீட்டுக்கு திரும்பியபோது நஸீர்பாய் இருக்குமிடம் காலியாயிருந்தது.

மனசஞ்சலத்துடன் அவர் வீட்டுக்கே சென்றுவிட்டேன். கட்டிலில் மல்லாக்க படுத்திருந்தார் முகம் ஒரு பக்கம் அவர் சிரிக்கும்போது ஏற்படும் வளைவு நிரந்தரமாக இழுத்துக்கொண்டிருந்த்தது. கால்கள் இரண்டுமடங்கு வீங்கியிருந்தன.  நிறுத்தி நிறுத்தி பேசினாலும் பேச்சு மட்டும் தெளிவாக இருந்தது.

நஸீர் பாய் கைகளால் சைகை செய்து சுவர் ஓராமாய் இருந்த பெட்டியை காண்பித்து திறக்க சொன்னார்.

“பேங்க் பாஸ்புத்தகத்தை எடுங்க தம்பி” என்றார்

தடிமனான அட்டை போட்டு பேங்க் கார்டையும் அதனுடன் இணைத்து ரப்பர் பேண்டால் கட்டி வைத்திருந்த்ததை அவரிடம் நீட்டினேன். அதில் உள்ள தொகையை குறிப்பிட்டு சரியாக இருக்கிறதா என்றார்.

“என் பேத்தி   படித்து பெரியவளாகி விட்டால், என் மகளுக்கு கஷ்டமில்லை, அதுவரை கஷ்டம்தான் எல்லாம் அல்லாவுடைய விருப்பம். அலை மேலே போனா .கீழறிங்கம்னு அல்லா ஆணை அதை மனுஷன் மாற்ற முடியுமா என்ன? அலை கீழ் இறங்கும் நேரம் பார்த்து என் மகள் பிறந்து விட்டால் போல அதுதான் அவளுக்கு நல்ல வாழ்க்கை அமையல. வாழ்க்கை ஒரு சொக்கட்டான் மாதிரி, தம்பி அதற்கு அர்த்தம் கேட்டேனே”

பாய் அது காயும் அல்ல பொருளும் அல்ல, அது ஒரு சொல் “சொல் கேட்டான்” என்பதுதான் சொக்கட்டான் ஆகியிருக்கிறது” என்றேன்

சன்னமாக சிரித்தார். “நானும் வாழ்க்கையில் எத்தனை விதமாய்
உருட்டியிருப்பேன், வீசிப்போட்டேன், நெருக்கிபோட்டேன், சுழற்றிப் போட்டேன். அடுத்து விழப்போவது அந்தக்கட்டைக்குத்தான் தெரியும்”

கைகளைதொட்டு அவரை மெல்ல ஆசுவாசபடுத்தினேன்.

அடுத்த நாள் காலை வேலைக்கு கிளம்பிக்கொண்டிருந்தேன்.
“நான் நஸீர்பாய்   மருமகன் பேசுகிறேன்,  மாமா மவுத்தாகி விட்டார்கள் உங்கள் பெயர் ஆனந்த் தானே” என்றார்.

உடனே புறப்பட்டு அவர்கள் வீட்டிற்கு சென்றுவிட்டேன். அதற்குள் நஸீர்பாயின் உடல் பிளாக்குக்கு கீழே கிடத்தப்பட்டிருந்தது.. மனம் அவரைக் கடைசி நேரங்களில் பார்க்க கொடுத்துவைக்கவில்லையே என்று உழன்றது.

பிளாக்கை சுற்றிலும் ஆட்கள் வந்தவண்ணம் இருந்தார்கள். என்னை அடையாளம் கண்டுகொள்ள நஸீர்பாய்தான் இல்லையே, அவர் உடலருகில் மவுனமாக நின்று கொண்டிருந்தேன்.
“நிச்சயிக்கப்பட்ட மரணத்திலிருந்து விதிவிலக்கு யாருமில்லை என்பதை ஏற்று மர்ஹூம் ஹாஜி நஸீர் அவர்களுக்கு துவா செய்வோமாக. அல்லாஹ அவர்களது நல்லறன்களைப் பொருத்திக்கொண்டு நற்கூலியை வழங்குவாராக, இவரிடம் யாராவது கடன் பெற்றிருந்தால் அவர்கள் சந்ததிகளிடம் அதை ஒப்படைத்து விடுங்கள். இவர் யாரிடமாவது கடன் வாங்கிருந்தால் அவர் சந்ததிகளிடம் பெறமுடியாத பட்சத்தில் அதை ஹலால் செய்து விடுவோமாக, ஆமீன்.”

நஸீர்பாய் கடைசி பயணத்திற்கு தயாராகிவிட்டார். யாரோ என் பின்னால் ”பாய்க்கு சொர்க்கந்தான் கடைசி காலத்தில்  மகளை வைத்து காப்பாற்றி, வீட்டையும் விற்று கொடுத்து விட்டார்” என்றார்கள்.

“ஆனந்த் அங்கிள், ஆனந்த் அங்கிள் “ என்று குரல் கேட்டுத் திரும்பினேன். நஸ்ரின்தான் என்னை அடையாளம் கண்டு கொள்ளும் ஒரே நபர்.

”நீங்க தான் ஆனந்தா, நான் தான் உங்களுக்கு போன் செய்தேன். நல்லவேளை என் மனைவியிடம்  மாமா உங்கள் போன் நம்பர் கொடுத்து வைத்திருந்தார்கள்”.

நான் எதுவும் பேசுவதற்குள் அவரே “நான் இப்போது வீட்டிற்கு வந்து விட்டேன்” என்று சொல்லிக் கொண்டே நஸ்ரினை தோளில் இருந்து இறக்கிவிட்டார். நஸ்ரின் ஓடிவந்து என் கைக்குள் புகுந்தது.

“இது யாரும்மா” என்றேன்.

“அத்தா, அத்தா” என்று திரும்ப திரும்ப சொன்னது.

அந்த வார்த்தையை அப்போதுதான் உச்சரித்துப் பார்க்கிறது. “உங்க அத்தாவா”  என்று அதை நானும் சொல்லிப் பார்த்துக் கொண்டேன். நஸ்ரினை  கொஞ்சி கொண்டிருந்த பாயின் மருமகனைப் பார்த்தேன். பாய் மகளுக்கு செய்ய வேண்டிய கடமையை செய்து சரியாகத்தானே ஆட்டத்தை முடித்திருக்கிறார் என்று நினைத்துக்கொண்டேன்.

Filed in: சிறுகதைகள்

Recent Posts

Bookmark and Promote!

One Response to "தாயம்"

  1. இளங்குமரன் says:

    அருமையான கதை. சிங்கப்பூர் சூழலைப் புரிய வைக்கும் கதை… நிறைய தெரிந்து கொண்டேன். தெம்பூசு மரத்தைத் தேடியபோது இந்தக் கதை மட்டுமே கிடைத்தது.. அருமை… நசீர்பாய் அவர்களின் மருமகள் பற்றி இன்னும் சிறிது விளக்கியிருக்கலாம்.

    ஆங்கிலச் சொற்களை முடிந்த அளவு குறைக்க வேண்டும்.

    நன்றி

Leave a Reply

Submit Comment