0

தேவதைக் கதைகளும் குழந்தைகள் உலகமும் – சித்ரா ரமேஷ்

குழந்தைகளுக்குக் கதை சொல்லி தூங்க வைக்கும் பழக்கம் உலகமெங்கிலும் இருக்கின்ற ஒரு பழக்கம் தான். நாட்டுக்கு நாடு, வீட்டுக்கு வீடு சொல்லப்படும் கதைகளும் மொழியும் மாறுபடும். ஆனால் அந்தக் கதைகளின் அடிப்படைக் கருத்துகள் ஒன்றாகத்தான் இருந்து வருகிறது. அறம் சார்ந்த வாழ்க்கையை கதைகளின் மூலம் குழந்தைகளுக்கு அறிவுறுத்தவே கதைகள் சொல்லப்படுகின்றன.  மனித வாழ்வின் துயரங்கள், கடின உழைப்பு, குழந்தைகள் உலகத்தில் இல்லாத ஒரு மாய யதார்த்தம், கண்டிப்பாக நல்லவர்களுக்கு நன்மை நடக்கும் என்ற நம்பிக்கை இவை அனைத்தும் கதைகளின் மூலம் சொல்லப்படும். குழந்தைகளின் உலகம் என்பது அவர்களின் சின்னஞ்சிறு உலகத்தில் வாழும் சிறிய மனிதர்களால் சூழப்பட்டுள்ளது. அங்கும் நல்லவர்கள், வஞ்சகர்கள், ஏமாற்றுக்காரர்கள், சிரிக்க வைக்கும் வேடிக்கை மனிதர்கள் இருக்கிறார்கள்.  இவை அனைவரும் அன்பான அம்மா, கொடுமைகார சித்தி, ஏமாற்றும் மாமா, சிரிக்க வைக்கும் நண்பர்கள், உதவி செய்யும் தேவதைகள், பொய் சொல்லி சங்கடத்தில் மாட்டி வைக்கும் உறவினர்கள் என்று கதையின் கதாபாத்திரங்கள் மூலம் குழந்தைகளின் கற்பனை உலகத்தில் உலவுவார்கள்.

குழந்தைகளுக்குக் கதை சொல்லப்படுவதற்காகவே பல குழந்தை இலக்கிய எழுத்தாளர்கள் கதைகள் எழுதியுள்ளனர்.

இந்தியாவில்  விஷ்ணுஷர்மா எழுதிய பஞ்ச தந்திரக் கதைகள், இதில் மிருகங்கள் பேசும். கதை சொல்லும். சோமதேவர் தொகுத்தளித்த  கதாசரிதசாகரா போன்றவை குழந்தைகளுக்குச் சொல்லப்படுவதற்காக தொகுக்கப்பட்டக் கதைகள் ஆகும். அரேபியாவில் ஈசாப் எழுதிய ஈசாப் கதைகள், அரேபிய இரவுக் கதைகள் போன்றவையும் இவற்றில் அடங்கும்.

ஜான் அமோஸ் ஜேன்வே என்பவர் எழுதிய ஆர்பிஸ் பிக்சஸ் என்ற புத்தகம் தான் முதன் முதலில் காமிக்ஸ் என்று அழைக்கப்படும் சித்திரக் கதை ஆகும்.

18 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ராபின்சன் குருசோ, கல்லிவர் பயணங்கள் போன்றவை குழந்தைகளை பயணங்கள் மூலம் ஒரு விசித்திர அனுபவங்களுக்குக் கொண்டு சென்றது. 18ஆம் நூற்றாண்டில் ஆங்கிலத்தில் குழந்தைகளுக்கு என்று ஒரு இலக்கிய உலகமே இருந்தது. பல கதைகள் எழுதபட்டு வந்தது. தாமஸ்டே எழுதிய சாண்ட்போர்ட் அண்ட் மெர்ட்டான் என்ற கதை ரூஸ்ஸோவால் உருவாக்கப்பட்ட கல்விக் கொள்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டக் கதையாகும். இது கிட்டத்தட்ட நூறு வருடங்கள் அதிக அளவில் விற்பனையான புத்தகமாகும்.

19 ஆம் நூற்றாண்டு குழந்தை இலக்கியங்களின் பொற்காலம் என்று சொல்லுமளவிற்கு மிகச் சிறந்த நாவல்களும் கதைகளும் வெளிவந்தன.

சார்லஸ் டிக்கன்ஸ் எழுதிய ஆலிவர் டுவிஸ்ட், நிக்கோலஸ் நிக்கல்பை, எ கிறிஸ்மஸ் கேரல், டெவிட் காப்பர் ஃபீல்ட், அ டேல் ஃஆப் டூ சிட்டிஸ்,

அலெக்சண்டர் டூமாஸ் எழுதிய த்ரீ மஸ்கிட்டீர்ஸ், தெ கௌண்ட் ஆஃப் மாண்ட் கிரிஸ்டோ,

வாஷிங்டன் இர்விங் எழுதிய ரிப் வான் விங்கில், தி லெஜண்ட் ஆஃப் ஸ்லீப்பிங் ஹாலோ,

கிரிம்ஸ் ஃபெரி டேல்ஸ்,

மேலும் ஹான்ஸ் ஆண்டர்சன், ஜான் ரஸ்கின், வால்டர் ஸ்காட், லூயிஸ் கெரெல், மார்க் ட்வெயின், ஜூல்ஸ் வெர்ன் போன்ற எழுத்தாளர்கள் எழுதிய பல கதைகள் குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கும் இலக்கியச் சுவையை அளித்தது. ஆஸ்கார் வைல்ட், ரூடியார்ட் கிப்லிங் எழுதியவை இலக்கிய மேன்மை பெற்று காலத்தை வென்று இன்றும் பல வடிவங்களில் இருக்கின்றன.

18, 19 ஆம் நூற்றாண்டுகளில் அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளில் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பும் பழக்கம் பெரிய பிரபுக்களின் வீடுகளில்  மட்டும் நடந்து கொண்டிருந்தது.  இது மெல்ல மாறி சாதாரண ஏழை எளிய மக்களும், நடுத்தர குடும்பத்தினரும் குழந்தைகளை படிக்க வைக்கும் பழக்கம் தொடங்கியது. கல்வியறிவு பெறுவது  நடுத்தர வர்க்கத்தும் மக்களுக்கு தங்கள் வாழ்க்கைச் சூழலை மாற்றுவதற்கு பெரிதும் உதவியது. ஐரோப்பிய நாடுகள்  தங்கள் ஆட்சி அமைத்த ஆசிய நாடுகளிலும் அந்த எளிய மக்களுக்கு பள்ளிகள் கட்டி ஆங்கிலக் கல்வி முறையை அறிமுகப்படுத்தியது. படிப்பறிவு பெற்ற  ஒரு புதிய சமுதாயம் உருவானது. படித்த மக்களுக்கு புத்தகங்கள்  உறுதுணையாக ஆனது.

புத்தகம் படிக்கும் பழக்கம் 18 ஆம் நூற்றாண்டில் தொடங்கி 19 ஆம் நூற்றாண்டில் உச்சகட்டத்தை அடைந்தது. இருபதாம் நூற்றாண்டில் இலக்கியம் படிப்பவர்களுக்கு பாடநூல்களாகவும்  இலக்கிய வடிவம் பெற்ற கதைப்புத்தகங்கள் பயன்படுத்தப்பட்டன.

புத்தகங்களை அச்சிடும் தொழில் நுட்பம் முன்னேறியதும் எல்லா புத்தகங்களும் அச்சிடப்பட்டு புத்தகக் கடைகளில் விற்பனைக்கு வந்தன. புத்தகங்கள் படிப்பதில ஆர்வம் காட்டியவர்கள் வீட்டில் சிறு நூலகம் வைக்கும் அளவிற்கு புத்தகங்கள் வாங்கும் பழக்கம் வளர்ந்தது.

இருபதாம் நூற்றாண்டில் வெளிவந்த குழந்தைகள் புத்தகங்கள் உலகமெங்கிலும் அதிக அளவில் பரவியது. இதற்குக் காரணம், பயணங்கள் எளிமையாக்கப்பட்டன. தொலைத் தொடர்பு முன்னேறியது. கடிதப் போக்குவரத்து, தந்தி,  தொலைபேசி போன்ற தொழில் நுட்பங்கள் உலகமெங்கிலும் பரவியது. இதனால் மேல் நாட்டு இலக்கியங்கள் கீழை நாடுகளுக்கு எளிதில் வந்து சேர்ந்தது.

எனிட் பிளைட்டன், சர் ஆர்தர் கானன் டாயில், பியாட்டிரிஸ் பாட்டர், மோண்ட்கோமெரி, கென்னத் கிரஹாம், ரோல்ட் டால் போன்றவர்கள் குழந்தைகள் மனதில் நீங்காத இடம் பிடித்த பல கதைகளை எழுதிய எழுத்தாளர்கள்.

தமிழில் குழந்தைகளுக்கு என்று தனியாக எழுதப்படவில்லை என்றாலும் பல வாரப்பத்திரிகைகளில் குழந்தைகளுக்கு என்று சில பக்கங்கள் ஒதுக்கப்பட்டு அதில் சித்திரக் கதைகள், ராமாயணம், மகாபாரதம் போன்ற புராணக் கதைகள், குறுக்கெழுத்துப் புதிர்கள், வண்ணம் தீட்டும் படங்கள் போன்றவை இருக்கும். பிறகு குழந்தைகளுக்கு என்றே பத்திரிகைகள் வெளிவந்தன. கண்ணன், கோகுலம், அம்புலி மாமா, சுட்டி விகடன் ஆங்கிலத்தில் வெளிவந்த பிரபல சித்திரக் கதைகளை தமிழில் கொண்டு வந்த ரத்னா காமிக்ஸ் போன்றவை இரும்புக்கை மாயாவி, ஜானி நீரோ, வேதாளம் (phantom) போன்ற சாகசக் கதைகளை நமக்கு அறிமுகப்படுத்தியது.

இந்தியாவில் பொதுவாக காலம் காலமாக  சொல்லப்பட்ட நாடோடிக்கதைகள், கிராமியக் கதைகள், இறை நம்பிக்கைச் சார்ந்த கிராம தேவதைக்கதைகள்,  மாய தந்திரங்கள் செய்யும் மந்திரவாதிக் கதைகள், காலம் காலமாய் புழங்கி வரும் புராணக்கதைகள், அதிலும் குறிப்பாக மகாபாரதக் கதைகள் குழந்தைகளுக்கு எழுத்து வடிவிலும், வாய் வழியாகவும் அறிமுகப்படுத்தப்பட்டவை. கௌசிகன், வாண்டு மாமா, மாயாவி, தேவன் போன்றவர்கள் தமிழில் குழந்தைகள் கதைகள் எழுதியுள்ளனர்.

21 ஆம் நூற்றாண்டில் புத்தகங்கள் படிக்கும் பழக்கம் குறைந்து ஊடகங்கள் மூலம் காட்சி வடிவத்தில் பல காமிக்ஸ் கதைகள், நாடகங்கள் பார்க்கும் பழக்கம் அதிகரித்துள்ளது. பள்ளி விட்டு வீட்டுக்கு வந்ததும் தொலைக்காட்சிப் பெட்டியின் எதிரே உட்கார்ந்து விரல் நுனியில் உலகத்தைப் பார்க்கும் 21 ஆம் நூற்றாண்டு குழந்தைகளுக்கு வீட்டின் தோட்டத்தில் மந்திரக்கோலுடன் வாழும் தேவதைகளும், ஒரு அவரைக் கொடியில் ஏறி வானத்தில் கட்டப்பட்ட மாளிகையில் இருக்கும் அரக்கனை கொல்லும் ஜாக், தன் வீட்டின் படுக்கையறையில் இருந்து ஆலிஸ் பார்க்கும் அதிசய உலகமும், டேவிட் காப்பர் ஃபீல்ட்டின் துயரம் நிரம்பிய வாழ்க்கையைப் படிக்கவும் நேரம் இல்லை. அதை அனுபவிக்கும் மனநிலையும் இல்லை. படித்து உணரப் பட வேண்டிய வாழ்க்கையை காட்சி வடிவில் பார்க்கும் வசதிகள் கிடைத்த பின் படிக்கும் பழக்கம் குறைந்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை.

இப்படிப் பல கதைகள் பல வடிவங்களில் மனித வாழ்க்கையின் நம்பிக்கைகளையும், சவால்களையும் சார்ந்து வந்துள்ளன. மந்திரவாதிகள், தேவதைகள் போன்ற அதிசய சக்தி படைத்தவர்கள் கதையின் கதாநாயகிகள், கதாநாயகர்களுக்கு பல அதிசய சக்திகளையும் வரங்களையும் கொடுக்கின்றனர். ஆனாலும் அவர்கள் வாழ்க்கை சாதாரண மனிதர்கள் போல பல துன்பங்களையும் இன்னல்களையும் கொண்டதாகத்தான் இருக்கிறது. அந்த அதிசய சக்தியினால் எந்த பெரிய மாற்றமும் நிகழாமல், கதையின் இறுதியில் மட்டுமே அவர்களுக்கு ஒரு தீர்வு கிடைக்கும். புராணக்கதைகளில் கடவுள் மனித வடிவில் பிறப்பு எடுத்தாலும் மனித வாழ்க்கையின் இன்ப துன்பங்களை அனுபவிப்பார். ஹாரி பாட்டர் கதையில் ஹாரி பாட்டர் பிறப்பால் ஒரு மந்திரவாதி. மந்திர, தந்திரங்கள் சொல்லித் தரும் பள்ளியில் படிக்கிறான். ஆனால் அந்த மந்திர தந்திரங்களால் அவன் வாழ்க்கை இன்னும் அதிக சிக்கல்கள் கொண்டதாக இருக்கிறதே தவிர அவன் எதிர்நோக்கும் பிரச்சனைகளை தீர்த்து வைக்கவில்லை. ஹாரி பாட்டர் புத்தகங்கள் எழுதிய ஜே கே ரௌலிங் மிகப் பெரிய பணக்காரியாக ஆகி விட்டார். இப்படி எழுதி பணம் குவித்த ஒரே குழந்தை எழுத்தாளர்  இவராகத்தான் இருக்க முடியும். இதைப் போன்ற புகழும், பொருளும் ஒரு எழுத்தாளருக்கு அதுவும் குழந்தைகள் இலக்கியம் படைக்கும் ஒரு எழுத்தாளருக்கு கிடைப்பது தமிழ்ச் சூழலில் மிக அரிது.

குழந்தைகளுக்காக ஒரே ஒரு கதையை எழுதிய அந்துவான் எக்சுபெரி இன்று வரை உலகின் மிகச் சிறந்த இருத்தலியல் கதையை (EXISTENSIALISM) எழுதியவராகக் கருதப்படுகிறார். குட்டி இளவரசன் கதை மீண்டும் மீண்டும் படிக்கப்பட்டு வருகிறது. உங்களுக்கு ஒரு சிறிய கதையை உங்கள் குழந்தைகளுக்குப் படித்து காட்ட நேரம் இருந்தால் குட்டி இளவரசன் கதையைப் படித்துக் காட்டுங்கள்.

 

 

 

 

 

 

 

 

Filed in: மாத இதழ்

Recent Posts

Bookmark and Promote!

Leave a Reply

Submit Comment