3

பாவைகள் – சித்ரா ரமேஷ்

chitra

பாவைகள்

 மணி எட்டாகி விட்டிருந்தது. அருங்காட்சியகம் மூடும் நேரம். அன்று வெள்ளிக்கிழமை. பள்ளி விடுமுறை தொடங்கும் சமயம். நிறைய பள்ளிகளிலிருந்து  மாணவர்கள் அருங்காட்சியகத்தைச் சுற்றிப் பார்க்க வந்திருந்தார்கள். எல்லோரையும் மேய்த்து அடக்கி தொட்டுப் பார்க்கும் பொருள்களை தொட அனுமதிக்க வேண்டும். தொடக்கூடாத பொருள்களை தொடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நீலவேணிக்கு கால் வலித்தது. அந்த பொம்மைகளைப் பார்க்கும் போதெல்லாம்  கால் வலியையும் பொருட்படுத்தாமல் ஆட வேண்டும் என்று தோன்றும். தன் மூதாதையரில் இருவர் வந்து  நிற்பது போல் இருந்தது. நடனம் ஆடுவது உயர் குடியினரின் செய்கை இல்லை என்ற  காலத்தில் வாழ்ந்த பெண்கள். இப்போது பணக்கார உயர்குடிப் பெண்களின் கலையாகி விட்டது. இந்தியாவில் பெரிய ஊர்களில் இந்த ஆடல் பாடல்களுக்கு மாதக் கணக்கில் விழாக்கள் எல்லாம் நடக்கின்றன என்று கேள்விப்பட்ட போது  அவளையும் மீறி பெருமூச்சு வந்தது. எஸ்பிளனேடில் உயர்தர நடன நிகழ்ச்சிகளுக்கு இருநூறு வெள்ளி கட்டி நடனம் பார்ப்பவர்கள் இருக்கிறார்கள். இருநூறு வெள்ளி இருந்தால் ஒரு மாதத்திற்கு  வேண்டிய உணவுப் பண்டங்கள் வாங்கி இன்னும் நன்றாக மீனுவுக்கு சமைத்துப் போடலாம். புவனேஸ்வரியிடம் செலவுக்குத் தரலாம். அதை விட்டு நடனத்தை எங்கே பார்க்கப் போவது?

 எல்லாப் பொருள்களையும் சரியாக இருக்கிறதா என்ற பொறுப்பாளர் பார்த்துக் கொண்டே வந்தார். வேணி நீ ஏன் அலைகிறாய்? நீ போய் வெளியில் உட்கார்ந்து கொள் நான் சரி பார்த்து விட்டு வருகிறேன் என்று அவர் சொல்லுவார் என்று எதிர்பார்த்தாள். சொல்லவில்லை. எதுவானால் என்ன? இன்றோடு கடைசி நாள். நாளை போய் மருத்துவமனையில் சேர வேண்டும். காலில் இருக்கும் புண் புரையோடி காலையே எடுக்கும் அளவிற்குப் போகாமல் இருப்பதற்கு அறுவை சிகிச்சை. அதில் காலை எடுப்பார்களா? இல்லை கால் விரல்களை எடுப்பார்களா என்பது தெரியவில்லை. புவனா காத்துக் கொண்டிருப்பாள். அவளுக்கு எல்லா விவரமும் தெரிந்திருக்கும்.

 இருந்தாலும் தன்னிடம் சொல்லவில்லை. வெளியில் போவதற்கு முன் அந்த அறையை ஒரு முறைப் பார்த்தாள். அது அறை இல்லை. அரை வட்ட வடிவமான மண்டபம். அருங்காட்சியகத்தைப் பார்க்க வரும் சிறு பிள்ளைகள் அதைச் சுற்றி சுற்றி ஓடிக் கொண்டிருப்பார்கள். அந்தக் குழந்தைகளுக்கு இந்த அருங்காட்சியகம் தன்னிடத்தே எத்தனையோ பழங்கதைகளை புதைத்து வைத்துக் கொண்டிருப்பது புரியுமா?

அதன் மூலையில் இரண்டு நடனப் பாவைகள். பச்சையும் சிவப்புமாக புடவையில் உடலெல்லாம் நகைகள் போட்டுக் கொண்டு, எடுப்பான மார்பும், சின்ன இடுப்பும் கொண்டு ஒய்யாரமாக தலையை வளைத்துக் கொண்டு நிற்கும் பொம்மைகள். தன் கொள்ளுப்பாட்டி இதைப் போல் அலங்காரம் செய்து கொண்டிருப்பாளா? பெட்டி நிறைய பட்டுப் புடவைகளும் நகைகளும் வைத்திருந்தாளா? ஆட்டமும் பாட்டுமாக காலையிலிருந்து கூத்தும் கேளிக்கையுமாக  நாள் கழிந்திருக்குமா? தினமும் மாலையில் தலைமுடியைப் பின்னல் போட்டு பூ வைத்து அலங்கரித்துக் கொண்டு அன்றைய நடனத்துக்கு ஆயத்தமாவாளா?

அந்த வாழ்க்கை முறைப் பற்றி எதுவும் தெரியவில்லை. எதாவது புத்தகத்தில் எழுதப்பட்டு இருக்கலாம். ஆனால் புத்தகம் படித்து புரிந்து கொள்ளும் அளவிற்கு படிப்பறிவு இல்லை. திரைப்படங்களில் பார்த்து தான் இந்தக் கற்பனை! தான் கடைசியாக எப்போது தலையை பின்னல் போட்டு பூ வைத்துக் கொண்டோம்? முப்பது வருடம் இருக்குமா? தலைமுடியை வெட்டி குட்டையாக ஆக்கிக் கொண்டாகி விட்டது. எப்போதும் பாண்ட் சட்டை, வீட்டில் சாதாரண வீட்டு உடை. நன்றாக உடை உடுத்திக் கொண்டு வெளியில் போவதை மறந்து எத்தனையோ வருடங்கள் ஆகி விட்டன.

 இந்த பொம்மைகள் இந்தியாவில் இருந்த தேவதாசிகளைக் குறிக்கிறது. இவர்கள் கோவில்களில் நடனமாடுவார்கள். நடனத்துடன் பாட்டு மற்றும் வாத்தியக் கருவிகள் அனைத்தையும் வாசிப்பார்கள். தங்கள் வாழ்வை  கலைகளுக்கென்று அர்ப்பணித்து கோவில்களில் இருப்பார்கள் என்று அருங்காட்சியகத்தில் இருக்கும் ஒவ்வொரு பொருள்களுக்கும் விளக்கம் அளிப்பவர் பார்வையாளர்களிடம்  கூறியதைக் கேட்டுக் கொண்டிருந்த நீலவேணிக்கு சிரிப்பு வந்தது. எந்த தேவதாசி கோவில்களில் வாழ்ந்தாள்? கோவிலைச் சுற்றி இருக்கும் தேரோடும் வீதிகளில் பணக்கார முதலாளிகளின் கைப்பாவைகளாக வாழ்ந்தனர் என்பது எல்லோருக்கும் தெரிந்த ரகசியம்!! இருந்தாலும் அருங்காட்சியகப் பொருளாக வைக்கும்  போது இதைச் சொல்ல முடியுமா?

 இப்படி ஒரு மேன்மை மிக்க மனிதர்களாக ஆகப் போகிறோம் என்று தெரிந்திருந்ததால் பாட்டி, அம்மாவின் கால்களில் சலங்கை கட்டாமல் படி படி என்று உயிரை எடுத்திருக்க மாட்டாள். பாட்டி, கொள்ளுப்பாட்டி கால்களில் அவர்களிடம் அனுமதி பெறாமல் குடியேறிய சலங்கைகளும், நடனக் கலையும் அம்மாவுக்கு மறுக்கப்பட்டது.   பாட்டிக்கு தன்னுடைய வாழ்க்கைப் பிடிக்கவில்லை. சே! என்ன பொறப்பு!  தினமும் யாரு வருவாங்க? இன்னிக்கி பொழப்பு ஓடுமா?ன்னு பாத்துக்கிட்டு நிக்கணும்? எல்லா அலங்காரமும்   அலங்கோலமா ஆறதுக்குத்தானே பண்ணிக்கணும்?  இந்த நாறப் பொழப்பு வேணாம்ன்னு உங்கம்மாவ படி படின்னு உயிர எடுத்தேன். கடசில அந்த பொழப்பும் இல்லன்னு ஆச்சு! தோசக்கல்லும் ஆட்டுக்கல்லும் அவ பொழப்புன்னு ஆச்சு!” என்று  நீலவேணியிடம் சின்னப் பெண் என்பதைப் பற்றி கவலைப்படாமல் பாட்டி புலம்பிக் கொண்டிருப்பாள்.

நாகப்பட்டினத்தில் ஆனா ரூனா செட்டியாரோடு ஆசைநாயகியாக  கப்பல் ஏறி பினாங்கு வந்ததும் வேலைக்காரி ஆன கதை! தோட்டத்தில் வேலைப் பார்க்கப் போய் ஆனால் செய்த வேலை தோட்ட வேலை இல்லை என்பதையும் பாட்டியே சொல்லியிருக்கிறாள். அம்மாவுக்கு முறைப்படி மாப்பிள்ளைப் பார்த்து செய்து வைத்தக் கல்யாணம். கையில் ஒரு பெண் குழந்தையோடு வாழ்க்கை மிச்சம்! வந்த மாப்பிள்ளைக்கு எது முறை என்று கவலைப்படாமல் ஓடிப்போனான்.  எப்படி வாழ்க்கை நடத்துவது? புக்கிட் பாஞ்சாங்கில் தோசைக் கடை. அம்மா என்றால் எல்லோருக்கும் வெள்ளை வெளேரென்று பூப்போல் தோசை மட்டும் தான் நினைவுக்கு வரும்.

தோசை சுடுகிற பெண் நினைவுக்கு வராத வண்ணம் பாட்டி பார்த்துக் கொண்டாள். யாராவது கூடுதலாக பேச்சுக் கொடுத்துக் கொண்டருந்தால் “என்னப்பா? வேலை வெட்டி இல்லையா? இங்கே கனகத்துக்கும் எனக்கும்  நிறைய வேலை கெடக்கு! ராத்தி்ரிக்கு மாவு அரைக்கணும். மசால் அரைக்கணும்”, என்று சொல்லி துரத்தி விடுவாள். எல்லாம் கந்தசாமி மாமா வரும் வரை தான்! அவரை எப்படி மாமா என்று சொல்ல முடியும்? சித்தப்பா என்று சொல்லலாம். அம்மா அவருடன் போகிறேன் என்று சொன்னதும் பெண்ணை என்ன செய்யப் போகிறாய் என்று பாட்டி கேட்கவில்லை. தன் பெண் ஒரு துணையுடன் வாழ்ந்தால் போதும் என்று விட்டு விட்டாள். பாட்டியும் பேத்தியுமாக ஒரு அவல வாழ்க்கை. தோசைகள்! எப்போதும் எண்ணெய் பிசுக்கு, மசாலா மணம். பள்ளியில் ஒவ்வொரு பாடமும் முடியும் போது மணி அடிப்பார்கள். அந்த மணி அடிக்கும் கல் பளபளவென்று வெங்கலத்தில் வட்ட வடிவமாக இருக்கும். அதைப் பார்த்தால் கூட தோசைக்கல் ஞாபத்திற்கு வரும்.

மணி எப்போது அடிக்கும்? வீட்டுக்கு ஓடிப் போகலாம் என்று இருக்கும். ஆனால் பள்ளியில் நடனம் பாட்டு என்று இருந்தால் மனம் மகிழ்ச்சியில் துள்ளும். பாட்டி பாட்டு டான்ஸ் இதெல்லாம்  நமக்கு வேணாம்ன்னு தான் இப்படி இருக்கேன். நீ டான்ஸ் டிரஸ் கொண்டா, பட்டுப்பாவாடை கொண்டான்னு கேட்டியான்னா நம்மால அதையெல்லாம் வாங்க முடியாதுன்னு மறுத்து விடுவாள். பிறகு தன்னுடைய பழைய இரும்புப் பெட்டியிலிருந்து ஒரு பட்டுப் புடவையை எடுத்து தையல்காரனிடம் கொடுத்து தைத்து வைப்பாள். ஆனால் பாட்டும் வரவில்லை. படிப்பும் வரவில்லை.  நடனத்திற்கு மனம் ஒத்துழைத்த அளவிற்கு உடம்பு ஒத்துழைக்கவில்லை. பாட்டிக்குப் பிறகு யாருமற்ற அனாதையாக உணராமல் தனகோபால் பார்த்துக் கொண்டான். வெறும் துணையாக மட்டும் இருந்தான். “கல்யாணம் கட்டிக்காம இருக்கிறது உங்களுக்கெல்லாம் பழக்கம் தானே? இப்படி வந்து பாத்துக்கிட்டு இருக்கேன். ஃபாக்டரில வேலைக்கு சொல்லியிருக்கேன்.”, ஆண் துணை என்பது எப்போதும் இல்லை என்ற வாழ்க்கை பழகி விட்டது. மீண்டும்  அம்மா மாதிரியே, பாட்டி மாதிரியே ஒரு பெண் குழந்தையுடன் தனிமை!

இப்போது புவனேஸ்வரியின் மூலம் அதுவே தொடர்கிறது. கொள்ளுப்பாட்டி, பாட்டி, அம்மா,  நான், மகள், பேத்தி என்று பெண்களாகத் தொடரும் வாழ்வு!.  அருங்காட்சியகத்தில் பெண் காவலர் வேலை. கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேலாக ஓடி விட்டது. சர்க்கரை நோய். காலில் சிறு புண் வந்து சரியாகாமல் இப்போது காலையே எடுத்தாலும் எடுக்கலாம் என்ற நிலை. அந்த  நடன மங்கைகளின் பொம்மைகளைப் பார்க்கும் போதெல்லாம் அவை தன்னைச் சீண்டுவதை உணர்ந்தாள். அந்த வாழ்க்கை வேண்டாம், இந்த வாழ்க்கை வேண்டாம் என்று யாரும் எதையும் தேர்ந்தெடுக்க முடியாது என்பதை அவள் உணர்ந்த போது அவள் வாழ்க்கை அவள் கையை விட்டு நழுவிக் கொண்டிருக்கிறது.

ஒரு கால் இல்லாமல் ஐம்பத்தி ஐந்து வயதில் மீண்டும் நடனம் கற்றுக் கொண்டு  ஆட முடியுமா? யாரோ ஒரு பெண்  விபத்தில் கால் போன பிறகு செயற்கைக் காலை வைத்துக் கொண்டு நடனம் ஆடினாள் என்று எப்போதோ செய்தித் தாளில் படித்த நினைவு. அது போல் ஏதாவது செய்ய முடியமா என்று தெரியவில்லை. காலை வெட்டி விட்டால் மீண்டும் நடப்பதற்கு செயற்கைக் கால் வைத்தால் போதும்.  ஏதாவது வேலைக்குப் போகலாம். புவனாவுக்கு ரொம்ப கஷ்டம் கொடுக்காமல் இருக்கலாம்.

 மெல்ல நடந்து விளக்குகளை அணைத்தாள். நடனப் பாவைகளைப் பார்த்தாள். நாம் எதை  இழந்தோம், எதைப் பெற்றோம் என்பது  அவளுக்குத் தெரியவில்லை.

(முற்றும்)

Filed in: கிளிஷே - கதைகள், செப்டம்பர் மாத இதழ்

Recent Posts

Bookmark and Promote!

3 Responses to "பாவைகள் – சித்ரா ரமேஷ்"

 1. கதை அருமையா இருக்கு…
  வாழ்த்துக்கள்.

 2. Editor says:

  பதிவு செய்யும் போதே படித்து விட்டேன். இரண்டு நிமிடம் மெளனமாகி விட்டது உலகு. மிகவும் அருமை. 3 தலைமுறைகளின் சோகத்தை பதிவு செய்து இருக்கிறீர்கள். மனதை கணக்க வைத்து விட்டது

 3. MK says:

  நல்ல கதை சித்ரா,
  கொஞ்சம் விவரித்தும் எழுதியிருக்கலாம்.

  கடைசி வரிகள் நச். நல்ல சிறுகதையாசிரியர் என்பதைச் சொல்கின்றன.

  எம்.கே

Leave a Reply

Submit Comment