5

புனித நீராகிய பானி – கிர்த்திகா தரண்

kirthika

 

பானி பூரிக்கும் எனக்குமுள்ள பந்தம் இன்று நேற்றல்ல..முன்பு பெங்களூர், மைசூர் வகை பானி பூரி உண்டு.. இப்பவும் கிடைக்கிறது சில இடங்களில்..அதில சூடாக பச்சை பட்டானி  மசாலா வைத்து அதன் மேல் கெட்டி இனிப்பு சட்னி வைத்து அதன் மேல் பச்சை நிற பானியை ஊற்றுவார்கள்..சில் கடைகளில் நறுக்கிய தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி தூவுவதும் உண்டு..சுட, சுட தொண்டையில் இறங்கும்..

புதிதாக இங்கு வருபவர்களுக்கு பானி பூரி வாங்கி கொடுத்து அழகு பார்ப்பேன்..அதுவும் பெரிய பூரியை..தொண்டைக்கு அருகில் போனவுடன் சூடாக உணரும் நேரத்தில் என்ன செய்வது என்று தெரியாமல்..மெல்லவும், முழுங்கவும் முடியாமல் முகம் போகும் அழகை ரசிப்பதற்கே பானி பூரி வாங்கி கொடுப்பது உண்டு..

பானிபட் படையெடுப்பு..ச்சே..பானிபூரி கடை எடுப்பு வடக்கே உள்ளவர்களால் ஆக்ரமிப்பு செய்யப்பட்ட பானி பூரி சுவை வேறு வகை..அந்த பூரியை கூடையில் அடுக்கி வைப்பதே ஒரு அழகு..பெங்களூரு பழைய கடைகளில் கண்ணாடி தடுப்பு வைத்து துடைத்து வைத்த தக்காளி அடுக்கி இருப்பது ஒரு வகை என்றால் வட நாட்டு ஸ்டைல் கூடை வேறு வகை..அதன் அழகுக்கு “ஒற்றை கூடையில் ஓராயிரம்  பூரிகள்”..என்று தலைப்பு வைத்து பின் நவீனத்துவ கவிதையே படைக்கலாம்.. பானி பூரி கவிதைகள் என்ற தொகுப்பை விரைவில் சுத்தம் பதிப்பகம் மூலமாக வெளியிடும் எண்ணமும் இருக்கிறது..

பெங்களூரு பானி பூரி கலாசாரம் பல்வேறு வகைப்பட்டது..பள்ளிகூட வாசலில் மாணவர்கள் கூட்ட கடைகள் ஒரு வகை.. ஐ-டி கம்பெனி வாசலில் பார்த்தால் பானி பூரியே டாக் மாட்டிக்கொண்டு இருக்குமோ என்ற சந்தேகம் வரும் அளவுக்கு கழுத்தில் சிவப்பு, அல்லது கறுப்பு கயிறில் அட்டை தொங்கவிடப்பட பேன்ட், ஷர்ட் மாடர்ன் யுவன், யுவதிகள் கூட்டம்.. அதுவும் பானியை அதக்கி கொண்டு அஷ்ட கோணல் வாயுடன் அலுவலக அரசியல் பேசுவதே அழகாக இருக்கும்.. கல்லூரி பெண்கள்..அதுவும் இங்கு நாசூக்கு பெண்கள்..மேனி கியூர் செய்யப்பட்ட நீளமான பள, பள நகத்துடன் தொன்னையில் இருந்து விண்டு எடுப்பது போல பூரியை எடுத்து விழுங்கும் அழகை பார்க்கும்  பசங்களுக்கு கண்டிப்பா சங்கு கழுத்து கவிதைகள் நாலு தேறுவது கியாரண்டி..

ஒரு நண்பர் இருக்கிறார்..எப்ப எனக்கு போன் செய்தாலும் எங்க இருக்கேங்க என்று கேட்கும் வேளையில் நான் பானி பூரி என்றே பெரும்பாலும் பதில் சொல்லுவேன்..அவர் என்னவோ அதிகம் செய்யமாட்டார்..ஆனால் என்ன ராசியோ, என்னவோ .. அவர் செய்யும் வேளையில் பானி பூரி கடையில்தான்..அவரே என்ன பானி பூரி கடையிலா..சாப்ட்டு வாங்க…அப்படியே பேசாதீங்க..என்று கூறும் அளவுக்கு முன்னேற்றம்..போன் வந்த உடனே எடுக்காவிட்டால் கை, கால் நடுங்கும் வியாதி..அது எந்த முக்கியமான வேளை நடுவில் வந்தாலும் எடுத்து பேசுவதே நாகரிகம் என்று போதிக்கப்பட்ட ஊர்.. முக்கியமாக பானி பூரி போன் நண்பரிடம் ஹதோ..என்று சொல்லிவிட்டு..முக்கியமாக பானி அவர் மேல்  படாமல்  இருக்க மொபைல் ஸ்கிரினை அவ்வப்பொழுது துடைத்துக்கொண்டே இடைவெளி விட்டு பேசுவேன்..லிம்கா சாதனை விருது கீழே விழுந்து எழுந்தா கூட கொடுக்கிறாங்க..நாம் பானி பூரி சாப்பிடும் வித்தை, அப்படியே போன் பேசும் வித்தைகளுக்கு கொடுக்காமல் இருப்பது ஒரு கலாசார துவேஷத்தையே காட்டுகிறது..பானி பூரி என்பது கலாசார உணர்வோடு சம்பந்தப்பட்டது..பானி பட் போர் காலத்தில் இருந்தே பானி பூரிக்கு வரலாறு உண்டு. மேகத அரச காலத்தில் இருந்து உட்கொள்ளபட்டதாகவும், காசியில் இருந்து பரவியதாகவும் , கோல் குப்பா போல பல பெயர்களோடு பல ஊர்களில் ஆட்சி புரிவதாகவும் நவீன கல்வெட்டு வரலாற்று குறிப்பு ஏடான விக்கிபிடியா விக்காமல் சொல்கிறது..

சில நவீன கடைகள் பிஸ்கட் போல ஒருவிதமான கரகரப்புடன் பூரி செய்து நவீன மோஸ்தரில் விற்றாலும்..காரில் இருந்து கால்நடை வரை அனைத்து கனவான்களும், சீமாட்டிகளும் நாடும் இடம் ரோட்டோர பானி பூரி கடைகளே.. பானி பூரியில் கொழுப்பு (cholesterol)   இல்லை..ஆனால் fat இருக்காம்..அதில கலோரி ஒரு ப்ளேட் க்கு நூறு கலோரி இருக்கு..எதுவாக இருந்தாலும் எண்ணையை ஆராய முடியாது..திரும்ப, திரும்ப உபயோகப்படுத்தும் எண்ணையில் பொறிக்கப்பட பூரி நல்லது இல்லை..ஆனால் பானி பூரிக்காக உயிரை கூட கொடுப்பவர்கள் அதையெல்லாம் கண்டுக்க போவது இல்லை..

இன்று வழக்கம் போல பானி பூரி சாப்பிட போன பொழுது ஒரு கை சுடிதார் நுனியை இழுத்தது..பிஞ்சு கை..ஏழு வயதுக்குள் இருக்கும்..அழுக்கு சட்டை..கண்டிப்பாக ஏழை சிறுவன்தான்..எப்போதும் முக்கியமாக சிறுவர்களுக்கு பிச்சை போட மாட்டேன்..சிறுவர்களுடன், அல்லது கை குழந்தையுடன் வரும் பெற்றோர்களை கொஞ்சம் மிரட்டி அனுப்புவேன்.. போலிசுக்கு போன் செய்வேன் என்றால் நம் பக்கம் வர மாட்டார்கள்..சைல்ட் ஹெல்ப் லைன் நம்பருக்கு பண்ணனும் என்று யோசனை இருக்கு.. எந்தளவுக்கு அவர்கள் செயல்படுகிறார்கள் என்று தெரியவில்லை..பிச்சை தொழில் ஒரு  மாபியா போல செயல்படுகிறது.. எனவே பழம் , உணவு வாங்கி தருவேன்..சில சமயம்..ஆனால் காசு கொடுக்க மாட்டேன். அந்த குழந்தை பானி பூரி கேட்டவுடன் அவனுக்கு கொடுக்க சொன்னேன்..பானி பூரி கொடுக்கும் பிழைப்பை தேடி பெங்களூரு வந்த வடகிழக்கு இளைஞன் ஒன்றை கொடுத்துவிட்டு என்னை பார்த்தான்..இல்ல..ஒரு ப்ளேட் என்றவுடன் பகிர்ந்து கொடுக்க ஆரம்பித்தான்..உடனே இன்னும் இரண்டு சிறுவர்கள் அக்கா என்றார்கள்..உடனே இதென்ன வம்பா போச்சு என்று நினைத்து..நாளை அல்லது மறுநாள் வருவேன்..இன்னிக்கு இவன் சாப்பிடட்டும் நாளை உனக்கு என்றேன்..அந்த பையனை இவர்கள் பார்த்தார்கள்..உடனே இந்த குட்டி பையன் தனக்கு வந்த பூரியை அவர்கள் இருவருக்கும் ஒண்ணு, ஒண்ணு கொடுத்தான்..ரொம்ப கூச்சமாக போய்  விட்டது எனக்கு..அவர்களுக்கும் கொடுக்க சொன்னேன்..எத்தனை செலவு செய்கிறோம்..உடனே வாங்கி கொடுக்க மனசு வரலியே என்று..பொய்யாக இருந்தாலும் அந்த நேரத்தில் உணவு வழங்குவதில் என்ன நஷ்டம் வந்துவிட போகிறது ?

பையன் பிறந்த நாள் அன்று குழந்தைகள் சாப்பிடாமல் வைத்த உணவு பொருட்கள் கண் முன்னே வந்தது..இங்கு ஒரு பானி பூரிக்கு பறக்கும் சிறு குழந்தைகள் அவலமும்..மனத்தில்….அந்த ஏழ்மையிலும் பகிர்ந்து கொடுக்கும் சிறுவன் ..என் சிறுமையை ஒரு நொடியில் வெளியே கொண்டு வந்து விட்டான்..இனி பானி பூரி அண்ணாந்து சாப்பிடாமல் தலை குனிந்தே சாப்பிடுவேன் என்று  நினைத்துக்கொண்டேன்.. ஆனால் ஒரு செயல், ஒரு நொடி போதும் மனம் கலங்க, திருந்த….பானி புனித நீராகிய கணம். சிறுவனால் சிறுமை சுட்டிக்காட்டப்பட்ட தினம்..

Filed in: கிளிஷே - கட்டுரைகள், செப்டம்பர் மாத இதழ்

Recent Posts

Bookmark and Promote!

5 Responses to "புனித நீராகிய பானி – கிர்த்திகா தரண்"

 1. நகைச்சுவையாக அழகாக எழுதியிருக்கிறீர்கள். செய்தியும் இருக்கு. விறுவிறுப்பும் இருக்கு என்று கருத்து சொல்ல வந்தேன்.
  // இந்த குட்டி பையன் தனக்கு வந்த பூரியை அவர்கள் இருவருக்கும் ஒண்ணு, ஒண்ணு கொடுத்தான்..ரொம்ப கூச்சமாக போய் விட்டது எனக்கு //
  நீ என்னை விடப் பெரியவனா என்று முகத்தைச் சுளிக்காமல் அழகாக சொல்லி விட்டீர் //பானி புனித நீராகிய கணம். சிறுவனால் சிறுமை சுட்டிக்காட்டப்பட்ட தினம்..//

  படித்தபின் மனத்தில் நிற்கும்படியான ஒரு கட்டுரை!

 2. அருமையான பதிவு.
  வாழ்த்துகள்.

 3. கீர்த்திகா தரன் says:

  நன்றி ஐயா..

 4. ஹேமா says:

  நன்றாக இருந்தது. தொடர்ந்து எழுதுங்கள்!

Leave a Reply

Submit Comment