8

மனச்சுமை – ‘பரிவை’ சே.குமார்.

kumar

 

மனச்சுமை

“நிம்மதியில்லாம இப்படி ஒரு வாழ்க்கை தேவையா?” கத்தினான் பாலா.

“தேவையா… தேவையில்லையான்னு இப்ப.. இங்க.. நீயே ஒரு முடிவு எடு” பதிலுக்கு கத்தினாள் நந்தினி.

“செய்யிறதெல்லாம் செய்துட்டு என்னைய முடிவெடுக்கச் சொல்லு… நல்லாயிருக்குடி…”

“என்ன செஞ்சாங்க… எப்பவும் நிம்மதியில்ல… விடிஞ்சா எந்திரிச்சா சண்டை… சை… வாழுறதுக்கு சாகலாம்ன்னு இருக்கு…”  லேசாக விசும்பினாள்.

“உன்னைய சாகடிச்ச பாவம் எனக்கு வேண்டாம்… எனக்குந்தான் என்னைக்கு உன்னைய கட்டுனனோ அன்னைக்கு சந்தோஷமெல்லாம் செத்துப்போச்சு… இப்பல்லாம் விடிஞ்சாவே பயமா இருக்கு…”

“பெத்தவங்க… கூடப் பிறந்தவங்க எல்லாரையும் உதறிட்டுத்தான் உன்னோட பின்னால வந்தேன். ஆசை அறுபது நாள்… மோகம் முப்பது நாள்ன்னு எண்ணிக்கிட்டு இருந்தே போல… அப்ப ஆரம்பிச்சே… முடியவே இல்லை… உனக்கு மட்டுந்தான் விடிஞ்சாப் பயமா… எனக்குந்தான் விடியவே கூடாதுன்னு நெனைப்பு வருது…”

“நானுந்தாண்டி எல்லாத்தையும் விட்டுட்டு உன் பின்னாடி வந்தேன். காதலிக்குப் போது சாந்த சொரூபினியா இருந்தே… இப்ப கொல்லங்குடி காளி உங்கிட்ட தோற்றுப் போயிடுவா போ… ஆட்டம்… எல்லாத்துக்கும் ஆட்டம்… உக்கிரமால்ல இருக்கே… ஒரு நாளாச்சும் சிரிச்சுப் பேசி… ம்க்கும்… நடக்கலையே”

“அன்னைக்கு காமாட்சியா தெரிஞ்ச நான் இன்னைக்கு உனக்கு காளியாயிட்டேன்… ஆனா நீ மட்டும் சாட்சாத் அந்த ராமனாவே இருக்கே…நீ ராமனாவே இரு… நான் இப்ப காளியாவே இருந்துட்டுப் போறேன்…எனக்குத் தேவை நீ எடுக்கப் போற முடிவு…”

“ஏன் முடிவை நீயே சொல்லுவே…”

“எதுக்கு நாளைக்கு அவதான் இப்படி ஒரு முடிவை சொன்னா… எனக்கு அந்த எண்ணமெல்லாம் இல்லைன்னு டயலாக் விடாவா… போதும் உங்கிட்ட பட்டதெல்லாம் போதும்… எதா இருந்தாலும் சொல்லு எனக்கு ஆபீஸ் போகணும்…”

“ஓகே… இனியாவது நான் சந்தோஷமா இருக்கணும்… ஸோ நாம பிரிஞ்சிடலாம்… இதுல உனக்கு ஏதுவும்…”

அவனை முடிக்க விடாமல் “வருத்தமான்னு கேக்க வாறியா… சத்தியமா இல்ல… மனசைப் புரிஞ்சிக்கத் தெரியாத ஒரு ஜந்து கூட வாழ்றதைவிட தனியே வாழ்றது மேல்…”

கை தட்டல் அந்தக் ஹாலை அதிர வைத்தது.

“ஹே… அருமையான நடிப்பு… எக்சலண்ட்… கலக்கிட்டிங்க… நம்ம அலுவலகத்துல இந்த வருச ஆண்டுவிழாவுல நம்ம குரூப்போட நாடகந்தான் கலக்கலா இருக்கப்போகுது… எங்க குரூப்ல பாலு மாதிரி நடிக்க முடியாது. அவன் ஒரு அசாத்திய திறமைசாலி… எல்லாத்துறையிலயும் புகுந்து விளையாடுவான்… ஆனா நந்தினி நீங்க பாலுவோட நடிப்பை மிஞ்சிட்டிங்க… குட்…” என்று ஆளாளுக்குப் புகழ்ந்தார்கள்.

“நல்லா பண்ணுனீங்க நந்தினி…அருமை…” முகத்தைத் துடைத்தபடி அவளை வாழ்த்தினான் பாலு.

“நீங்களும்தான்… அருமையா நடிச்சீங்க…” என்று அவனது கையைப் பிடித்து குலுக்கி விடைபெற்றாள்.

 மறுநாள் மதிய இடைவேளை…

கேண்டீனில் சாப்பிட்டுக் கொண்டிருந்த பாலாவுக்கு எதிரில் சாம்பார் சாதத்துடன் வந்து அமர்ந்த நந்தினி, என்ன இன்னைக்கு வேலை பிஸியோ… பாலா சார் டீ டைம் அரட்டையில கலந்துக்கலை…” என்றாள்.

“அப்படியெல்லாம் இல்லைங்க… கொஞ்சம் வேலை இருந்தது… மதியத்துக்குள்ள முடிக்கணுங்கிறதால இடையில ரெஸ்ட் எடுத்துக்க தோணலை…”

“ம்…”

“நந்தினி நான் ஒண்ணு கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே…”

அவனைப் பார்த்து சிரித்தவள் மனசுக்குள் எல்லா ஆம்பளைங்களும் மாதிரி நீயும் லவ் பண்றேன்னு மட்டும் சொல்லிறாதே… என்று நினைத்தபடி “கேளுங்க பாலா சார்…” சாரை அழுத்தமாக்கினாள்.

“நேற்று ரிகர்சல்ல… நீங்க நல்லா நடிச்சீங்கன்னு தள்ளி நின்னு பாத்தவங்க சொன்னாங்க… ஆனா நீங்க அப்படியே மாறீட்டிங்க… உங்க உதடுகள் துடிச்சதையும் கண்ணு கலங்குனதையும் நான் பார்த்தேன்… நேற்றே கேக்க வேண்டான்னு பார்த்தேன்… ” நிறுத்தினான்.

அவனை ஏறிட்டுப் பார்த்தவள் தலையை கீழே இறக்கி தட்டில் கோலமிட்டாள்.

“எதோ ஒரு சோகம் உங்களுக்குள்ள இருக்கு… சொல்லணுமின்னா சொல்லுங்க… இல்லேன்னா…”

லேசாக சிரித்தாள்… எப்போதும் போலில்லாமல் புன்னகை வறண்டு போயிருந்தது… “இதுல சொல்றதுக்கு ஒண்ணுமில்லங்க… நடிப்பு தத்ரூபமா வரணுங்கிறதுக்காக அப்படி நடிச்சேன்… நமக்கெல்லாம் என்ன வரலாறு இருக்கப் போகுது… உங்களுக்கும் ஒரு கோக் வாங்கவா…”

“இல்ல… வேண்டாம்… எனக்கு வேலை இருக்கு… ஈவினிங் பார்க்கலாம்” என்றபடி கிளம்பினான்.

மாலை ரிகர்சல் முடிந்து பாலு கிளம்ப, ‘பாலு சார்… கொஞ்ச நேரம் எதாவது காபி சாப்ல போயி சூடா காபி சாப்பிட்டுட்டு கொஞ்சம் பேசிட்டுப் போலாமா?”

“ஓ… எஸ்… வாங்க… பக்கத்துல போகலாம்”

காபியை உறிஞ்சியபடி, “ஆமா சார்… என்னைப் பற்றி உங்க மனசுல என்ன நெனச்சிருக்கீங்க..?” நேரடியாக கேட்டாள்.

“நா..நா…நான் தப்பால்லாம் நெனைக்கலைங்க….”

“நானும் நீங்க தப்பா நெனச்சீங்கன்னு சொல்லலை… இந்தப் பொண்ணு இப்படியிருந்திருப்பாலோங்கிற பார்வையில என்னைப் பற்றி ஒரு எண்ணம் வந்திருக்கும்ல….”

“நீங்க பாதிக்கப்படிருக்கீங்கன்னு உங்க கண்ணு சொன்னுச்சு… ஆனா எங்க… யராலன்னு எனக்குத் தெரியலை…”

பதில் சொல்லாது காபியை உறிஞ்ச்சிக் கொண்டிருந்தவள், “சார்… எனக்கு கல்யாணம் முடிஞ்சிருச்சி…” என்றாள்.

“அப்படியா… நம்பவே முடியலை… ஆமா கணவர் குழந்தைகள்…” சந்தோஷமாகக் கேட்டான்.

லேசாக சிரித்தவள் “திருமண வாழ்க்கை ஒருவருசம்… ஒரே வருசம்… காதல் வாழ்க்கையில சுனாமி வந்து தனித்தனியா…” லேசாக கண்ணீர் எட்டிப்பார்க்க கர்ச்சீப்பால் துடைத்துக் கொண்டாள்.

“என்னங்க சொல்றீங்க… காதலிச்சிக் கல்யாணம் பண்ணி… விவாகரத்துப் பண்ணிக்கிட்டிங்களா..? அப்ப உங்களுக்குள்ள என்ன புரிதல் இருந்தது… என்ன வாழ்க்கை வாழ்ந்தீங்க… எனக்கு விளங்கலை…”

“புரிதல்… காதலிக்கும் போது ரெண்டு பேருக்கும் எல்லாம் தித்திப்பா இருந்தது. எனக்கு அவரும் அவருக்கு நானும் உலகமா இருந்தோம். ஆனா மேரேஜ்க்கு அப்புறம் வாழ்க்கைக்குள்ள போனப்போ நிறைய விசயங்கள் ஒத்துப் போகலை…”

“ஒத்துப் போகலைன்னா…அவரு குடிச்சிட்டு வந்து சண்டை போடுவாரா… இல்லை உங்களுக்கு டார்ச்சர் கொடுத்தாரா…”

“சேச்சே… அவருக்கிட்ட கெட்ட பழக்கமெல்லாம் கிடையாது… டார்ச்சர்… ஒரு வகையில சில விஷயங்கள்ல டார்ச்சர்தான்…. எங்களோட புரிதல் தப்பாப் போச்சு… அவரு என்னைய கெட்டவள்ன்னு நெனச்சார்… நான் அவரு சரியில்லைன்னு நெனச்சேன்… அதனால…”

“சின்னச் சின்ன சண்டைகளால வாழ்க்கையை இழந்துட்டு நிக்கிறீங்களே… கொஞ்சம் உக்காந்து பேசியிருந்தால் ஈஸியா சால்வ் பண்ணியிருக்கலாமே… ஆமா டைவர்ஸ் வாங்கிட்டிங்களா…?”

“வாங்கிட்டோம்… சின்னச் சின்ன உரல்கள் பெரிசா உருவெடுத்துருச்சு… எடுக்கெடுத்தாலும் சண்டை… சச்சரவு… அலுவலக நேரமும் தூங்குற நேரமும் போக எப்பவும் சண்டை… பல இரவுகள்ல என்னோட தலையணை நனஞ்சிருக்கு… தூக்கம் இழந்த இரவுகள் அவை… குடும்ப உறவுகள் அற்றுப் போன ஒரு வாழ்க்கை சார் அது… கண்ணைக் கசக்கிக்கிட்டு அம்மா வீட்ல போயி நிக்க முடியாத கல்யாணம் அது… நல்லதோ கெட்டதோ ரெண்டு மனங்களுக்குள்ளதான் எல்லாமே… எனக்கு அவர் ஆறுதலா இருக்கலை… எத்தனை நாள்தான் பொறுமையா இருக்கிறது… என்னாலயும் முடியலை… பதிலுக்கு கத்த ஆரம்பிச்சேன்… என்னைக் காளின்னு சொல்லிட்டாரு அந்த ராமர்” கண்களை துடைத்துக் கொண்டாள்.

“ரொம்ப கஷ்டமா இருக்கு…. சின்ன வயசுல வாழ்க்கையை இழந்துட்டு வந்து நிக்கிறீங்களே… ஆமா குழந்தை…” மெதுவாக இழுத்தான்.

“இல்ல… தள்ளிப் போட்டோம்… அது பொறந்திருந்தா இன்னைக்கு நெலமைக்கு ரொம்ப கஷ்டப்படும் சார்…பியூச்சர் பிளானெல்லாம் பண்ணினோம்… பட் எல்லாம் காற்றுப் போன பலூனாயிருச்சி…”

“ம்… புரியாத காதல்…புரியாமலே பிரிஞ்சிருக்கீங்க…”

“வீட்டை எதுத்துக்கிட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டா… அந்த வாழ்க்கை நீடிக்காத போதுதான் சார் உறவுகளோட அன்பு தெரியுது… அதோட வலி அனுபவிச்சாத்தான் தெரியும்.  அம்மா, அப்பா, அண்ணன், தங்கை எல்லாம் இருந்தும் இன்னைக்கு இந்த ஊர்ல நான் அனாதையாத்தானே ஒர்க்கிங் உமன்ஸ் ஹாஸ்டல்ல தங்கி காலத்தை ஓட்டுறேன்…”

“எல்லாக் காதலும் வலி நிறைந்தது இல்லைங்க… புரிஞ்சிக்கிட்டு வாழ்ந்தா அது சொர்க்கம்ங்க… உறவுகளோட பிரிவும் அன்பும் உன்னதமான காதல்ல தெரிவதில்லைங்க… ஏன்னா நல்லா வாழ்ந்த உறவுகள் எல்லாம் மறந்துட்டு தேடி வருவாங்க…ஆமா உங்க கணவர் எங்க இருக்கார்? நான் வேணுன்னா பேசி சரிபண்ணுறேங்க… மீண்டும் இரண்டு பேரும் சேர்ந்து வாழணுங்கிறது என்னோட ஆசைங்க…”

“எல்லாம் முடிஞ்சி போச்சு பாலா சார்… அதான் கண்கானாத எடத்துக்கு மாறுதல் வாங்கிக்கிட்டு இங்க வந்துட்டேன். இனி இங்கிட்டேதான் என்னோட காலம் வரைக்கும்… நான் சொல்றேன்னு தப்பா நெனைக்காதீங்க… எல்லா ஆண்களுக்குமே நம்மளை நம்பித்தானே வந்திருக்கான்னு ஒரு ஏளனம்… எங்கே போயிறப்போறான்னு ஒரு இறுமாப்பு… என்ன செய்யச் சொன்னாலும் செய்யனுங்கிற ஆதிக்கம்… இதுல ஊறித்தான் இருக்காங்க… அதிலும் குறிப்பா காதலிச்சுக் கல்யாணம் பண்ணினவங்ககிட்ட இது ரொம்ப இருக்கு…”

“இதை ஏத்துக்க முடியாது நந்தினி… இது எங்கயாவது ஒரு சிலருக்கிட்ட இருக்கலாம்… காதலிச்சு கரம் பிடிச்சா அந்த ஆம்பளை கண்டிப்பா மனைவியை நேசிக்கிறவனா… அவளோட ஆசாபாசங்களுக்கு மதிப்புக் கொடுக்கிறவனா இருப்பான்… நம்மள நம்பி குடும்பத்தை விட்டுட்டு வந்துட்டாளே… இனி நாமதான் அவளுக்கு எல்லாமா இருக்கனுமின்னு நெனைப்பான்… நீங்களும் உங்க கணவரும் வாழ்ந்த வாழ்க்கை எப்படின்னு எனக்குத் தெரியாது… ஆனா உங்க இரண்டு பேருடைய பார்வையிலும் தப்பு இருந்திருக்குன்னு தெரியுது… குருட்டுக் கோழி இரையைக் கொத்துறமாதிரி வாழ்க்கை நடத்தியிருக்கீங்கன்னு தெரியுது… ஈகோவை கொன்னுட்டு வாழத் தெரியாம… அதாலயே உங்க வாழ்க்கையை கொன்னுட்டிங்க…இது தான் நிஜம்… நீங்க கொஞ்சம் விட்டுப் போயிருந்தாலோ… இல்லை அவளுக்கு யார் இருக்கா… நாமதானே எல்லாமேன்னு அவராவது விட்டுப் போயிருந்தாலோ உங்க காதல் வாழ்க்கை இனிச்சிருக்கும்… ஆனா இரண்டு பேரும் முட்டிக்கிட்டிருக்கீங்களே ஒழிய மோதலை முடிவுக்கு கொண்டு வர நினைக்கலை… சாரி… தப்பா சொல்லியிருந்தா மன்னிச்சுக்கங்க…”

“அதெல்லாம் இல்ல சார்… நீங்க சொல்றது புரியுது… எடுத்தோம் கவிழ்த்தோமுன்னு ஒரு வாழ்க்கையை தொலச்சிட்டு வந்து நிக்கிறேன்னு இப்ப எனக்குப் புரியுது… புரிஞ்சி என்ன பண்றது… எல்லாம் முடிஞ்சி போச்சு சார்… மத்தியானம் கேட்டீங்க… சொல்ல வேண்டான்னு பார்த்தேன்… யார்கிட்டயாவது சொன்னா ஆறுதல் கிடைக்கும்ன்னு பார்த்தேன். அதான் சொல்லிட்டேன். இப்போ மனசு தெளிஞ்ச நீரோடை மாதிரி இருக்குங்க… தயவுசெய்து இந்த விவரம் நமக்குள்ளே இருக்கட்டும்… வேற யார்கிட்டயும் சொல்ல வேண்டாம்… இங்க மாற்றல் வாங்கிக்கிட்டு வந்ததுக்கு அப்புறம் மற்றவங்க மாதிரி நாமளும் சந்தோஷமா இருக்கணுங்கிறதுக்காகத்தான் நாடகத்துல நடிக்க விரும்பினேன். ஆனா அந்தக் கதையும் என்னோட வாழ்க்கையை பிரதிபலிக்குது… சரி நாளைக்கு ரிகர்சல் இருக்கு… எப்பவும் போல பண்ணனும்… எல்லாத்தையும் இங்கயே விட்டுட்டு போயிடணும் சார்… பட்டாம்பூச்சியாய் பறக்க நினைக்கிற நந்தினியாய் இருக்கணும் சார்…”

“என்னங்க நீங்க… வயசா ஆயிடுச்சி… உங்க மனசுக்குப் பிடிச்ச மாதிரி ஒருத்தரை பார்த்து வாழ்க்கைத் துணையாக்கிட்டு சந்தோஷமா வாழ்க்கை நடத்துங்க… கண்டிப்பா உங்க வாழ்க்கை ருசிக்கும்… வாங்க போகலாம்” பணத்தைக் கொடுத்துவிட்டு வெளியில் வந்தனர்.

“ஓகே சார்… நாளை பார்க்கலாம்…” என்று வெளியேறி தனது ஸ்கூட்டியில் பறந்தாள்.

“ம்… வெளியுலகுக்கு பட்டாம்பூச்சியா காட்டிக்கிட்டு… உள்ளுக்குள்ள பட்டுப் போயிருக்காளே… நல்ல வாழ்க்கை அமைந்து அவளும் சந்தோஷமாக இருக்கணும்” என்று நினைத்தபடி வண்டியை எடுத்தவன் நந்தினி பற்றிய சிந்தனையோடு காதல் மனைவிக்கு பூ வாங்கிக் கொண்டு வீட்டை நோக்கி வண்டியைச் செலுத்தினான்.

 

 

 

Filed in: கிளிஷே - கதைகள், செப்டம்பர் மாத இதழ்

Recent Posts

Bookmark and Promote!

8 Responses to "மனச்சுமை – ‘பரிவை’ சே.குமார்."

 1. வணக்கம்…
  எனது சிறுகதையை வெளியிட்டமைக்கு சிங்கப்பூர் கிளிஷே இணைய இதழின் குழுவுக்கும் பொறுப்பாசிரியர் தங்கை அனிதாராஜ் அவர்களுக்கும் நன்றி.

  முதல் முறை எனது எழுது சிங்கை இணைய இதழில்… ரொம்ப சந்தோஷமா இருக்கு…

 2. நந்தினியை இவன் காதலிக்கிறேன் என்று சொல்லப் போவதாய்த்தான் எல்லோரும் எதிர்பார்த்திருப்பார்கள்! வழக்கம்போலவே நல்ல கதை குமார்.

 3. மிக அருமையான கதை! வழக்கமான கதை என்ற ஆரம்பத்தில் தோன்றினாலும் முடித்த விதம் சிறப்பு! வாழ்த்துக்கள்!

 4. தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே…

 5. Venkat says:

  அருமையான கதை குமார். பாராட்டுகள்.

 6. Hi! I could have sworn I’ve visited this website before but after browsing through a few of the
  articles I realized it’s new to me. Nonetheless, I’m definitely delighted
  I discovered it and I’ll be book-marking it and checking back often!

Leave a Reply

Submit Comment