1

மௌனம் தியானம் பிரார்த்தனை – ஆத்மார்த்தி

aathmarthi

 

மௌனம் தியானம் பிரார்த்தனை

1.நனவென ஒன்றில்லை

இசைபட வாழ்தலே வாழ்வு.நானெல்லாம் எழுத்தாளன் ஆவேன் என்று நானே கண்ணாடி முன் நின்று சொல்லியிருந்தால் அதை உள்ளே இருந்த நானே நம்பியிருக்க மாட்டேன். காலநதி நகர்த்திக் கொண்டு போய்ச் சேர்க்கும் கரைகள் ஒன்றா இரண்டா..?யார்க்கு எது நடக்கும் என்று யாரும் அறியமுடியுமா என்ன..?என் வாழ்வில் இதுவரைக்குமான நகர்தல்களினிடையே இருக்கும் அத்தனை ஒழுங்கின்மைகளையும் சற்றுத் தள்ளி நின்று உற்றுப் பார்த்தால் யாரோ ஆடும் சொக்கட்டான் என்பது புரிகிறது.ஒவ்வொருவர் வாழ்வும் ஒரு ஆட்டம் தானே..?உலகம் ஆட்டகளம்.ஆட்டம் நித்யம்.

வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் அதற்கு முந்தைய கணம் நெருக்குகின்றது.நிகழும் கணம் தன்னைத் தானே சுக்கு நூறாக உடைத்துக் கொள்கிறது.எதிர்ப்படுகிற ஒரு முகத்திலாவது புன்னகை தென்படாதா என்று தேசங்களெங்கும் வீதிகளெங்கும் அலைகிறான் மானுடன்.ஒரே கணத்தில் சகல தெய்வங்களாலும் கைவிடப் பட்டவனைப் போல

நோய்மை ததும்பும் மனத்துடன் தன்னையே தான் சுமக்கவியலாத பெரும்பாரத்துடன் நிர்ப்பந்திக்கப் பட்ட வாழ்வின் ஏதாவதொரு முடுக்கில் ஏதேனுமொரு அன்பின் கரம் தன்னைவாரி அணைத்துக் கொள்ளாதா என்று ஏங்குகிறான்.

இசை தவிர வேறேது..?இசை அவனை ஸ்வீகரிக்கிறது.இசை அவன் மனதை ஆற்றுப்படுத்துகிறது.இசை அவனை வேறோரு புதியவனாக்குகிறது.இசை அவனை நிரந்தரமாய் அமைதி தவழுகிற புண்யஸ்தானத்துக்குக் கடவுச்சீட்டாகிறது.இசை அவனை மீட்கிறது.இசை அவனை குணப்படுத்துகிறது.இசை கழுவிய பிற்பாடு அவன் மனமுழுக்க இளகி மென்மையாகிறது.

ஒரு தொடர்பத்தி எழுதலாம் என்று திட்டமான போதே இந்தமுறை இதன் கலந்து கட்டித் தன்மையில் என்னென்ன வரவேண்டும் என்று முன்னோட்டம் செய்து பார்த்ததில் இசை ரசனை புத்தக வாசிப்பு மற்றும் கொஞ்சம் பிற கலைகள் குறித்து எழுதலாம் என்று தீர்மானித்தேன்.ஒரு நாற்சதுரத்தினுள் மூவர்ணத்தை விதவிதமாய் நிரப்பிப் பார்க்கும் எத்தனம்.

இது முன்னுரை அல்ல.இருபத்தி ஓராம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் நின்றுகொண்டு இருபதாம் நூற்றாண்டின் சர்வகாலமெங்கும் நிரடிப் பார்ப்பது மெய்யாகவே சுகானுபவம்.எண்பதுகளின் பிற்பகுதிகளில் இரண்டு பேர் பரிச்சயமானால் முதல் பத்து கேள்விகள் என்னவாக இருக்கும்.?

பிடித்த நடிகர்/நடிகை
பிடித்த சினிமா
பிடித்த பாடகர்
பிடித்த இசையமைப்பாளர்
பிடித்த பாடகி
பிடித்த பாடல்
பிடித்த இயக்குனர்
பிடித்த எழுத்தாளர்
பிடித்த வர்ணம்
பிடித்த ஊர்

சிந்திப்போம். இன்றைக்கு இந்த இதே கேள்விகள் தான் கேட்கப்படுகின்றனவா..?  முன்னும் பின்னுமாய்ப் பல கேள்விகளும் பல விருப்பத் தேர்வுகளுமாய் பத்தோடு பதினொன்றாய் சினிமா இசை இலக்கியம் ஆகிய மூன்றும் பலவுள் சிலவாய்ச் சிதைந்திருக்கின்றன.

 பாடல் கேசட்டுகளும் பாட்டுப் புத்தகங்களும் ரேடியோக்களும் தந்த எண்பதுகளின் சந்தோஷம் இன்றைக்கு இருக்கின்றதா என்பதே அச்சந்தரும்  வினாவாகக் கசடு போல் தேங்குகின்றது.    இது ஒப்பீடல்ல.வாழ்வென்பது ஞாபகங்கள் தானேதவிர வேறேதுமில்லை.நினைத்துப் பார்க்கத் தானே நெஞ்சகமும் நினைவுகளும்..?அசை போட்டால் தானே மனிதன்..? ஞாபகம் என்ற ஒன்று தானே மனிதனைப் பிறவுயிர்களிடமிருந்தெல்லாம் தனித்துச் சிறக்க வைக்கிறது..?

எண்பதுகளில் ஏன் தொண்ணூறுகளின் பாதி வரைக்கும் இருந்த உலகம் அல்ல இப்போது நாமிருப்பது.இது நம்பகமல்ல.நிதர்சனம்.அந்தக் காலத்தைப் பற்றிய அசை போடுதலுக்கு இசை சினிமா இலக்கியம் ஆகியவற்றைப் படகுகள் போலவும் துடுப்புகள் போலவும் பயன்படுத்திப் பார்ப்போம்.இது ஆனந்த நீச்சல்.

எழுபதுகளின் ஆரம்பத்தில் வெளியான க்ரஃப்ட்வெர்க் எலக்ட்ரோ பாப் வகையறா இசையின் பிதாமகர்கள்.வெளியாகி நாற்பத்துச்சில்லறை வருஷங்களைக் கடந்தும் இன்றைக்கும் யதாஸ்தானத்தை விட்டுத் தராமல் கெட்டியாக உயரப்பறக்கும் இசைக்கொடி.நாலு வித்யாசர்களால் தொடங்கப்பட்ட இந்த இசை உலகை உலுக்கியது சரித்திரம்.

இன்னா நாற்பது இனியவை நாற்பது மாதிரி இங்கிலாந்து அமெரிக்க டாப் 40 வரிசையில் பலகாலத்துக்கும் முதலாவதாக இருந்த இசை இன்றைக்கும் வருங்காலத்தின் இசை எனக் கொண்டாடப் பட்டது.மதுரையில் திருநகர் என்னும் பிரதேசத்தில் கலைவாணி என்றொரு திரையரங்கம்.இன்றைக்கும் இருக்கிறது. அதன் அரங்கம் அத்தனை அழகாக இருக்கும்.மதுரையில் எண்பதுகளில் கட்டப்பட்ட வெகுசில ஏஸி திரை அரங்கங்களில் அதுவும் ஒன்று.

ஊருக்கு சற்றுத் தள்ளினாற்போல் இருக்கும் அரங்கம் என்பது ஒரு விபரம்.அரங்கத்தின் முன்னால் பரந்த பார்க்கிங் இருக்கும்.ஒரு அழகான சதுரமாக அதன் உட்கட்டமைப்பு இருக்கும்.கொள்ளை அழகான தியேட்டர் அது. என் பன்னிரெண்டு வயதில் முதன்முதலாக அங்கே படம் பார்த்தேன்.முதல் படம் மைடியர் மார்த்தாண்டன் என நினைக்கிறேன்.

சொல்ல வந்தது வேறு.கலைவாணி தியேட்டரில் அப்போது இரண்டு விஷயங்கள் பிரமாதமாக இருக்கும்.ஒன்று அற்றை தினங்களில் வேறெங்கேயும் கிட்டாத கோன்-ஐஸ். இரண்டாவது ஒவ்வொரு காட்சி ஆரம்பத்திலும் மூடி இருக்கும் திரை மெல்ல உயரும். அதுவரைக்கும் க்ரெஃப்ட்வர்க்கின் ஆல்பம் தான் ஒலித்துக் கொண்டிருக்கும்.படம் போடுவதற்கான நேரம் வந்ததும் திரை உயர்வதற்கென்றே இருக்கும் பிரத்யேகமான இசை ஒலிக்க ஆரம்பிக்கும். கிட்டத் தட்ட நூற்றுக்கணக்கான படங்கள் பார்க்கச் சென்று அவற்றுக்கு முன்னதான காத்திருப்பு காலத்தில் கேட்டுக் கேட்டு மனசு முழுக்க நிரம்பியது அந்த இன்ஸ்ட்ரூமெண்ட் இசை.

என்ன வேடிக்கை என்றால் அப்போதெல்லாம் அதன் பெயர் என்ன எந்த ஆல்பம் என்று தெரியாது.யாரைக் கேட்டாலும் இளையராஜாவின் இங்கிலீஷ் ம்யூசிக் என்று தான்  சொல்லிக்கொள்வோம்.இசை என்றாலே சினிமா இசைதான் என்ற அளவில் புரிதலும் அதன் அடைதலும் இருந்தபடியால் அப்படி.

பின் மெல்ல ஒருதினம் பெரியவனாகிப் பலவிதமான இசைக்கோர்வைகளையெல்லாம் தாண்டிக் கொண்டிருக்கும் போது ஒருதினம் அதென்னது..?பேரே தெரியாமல் மனசுக்குள் சம்மணம் இட்டு அமர்ந்திருக்கும் அந்த இசையை விட்டுவைப்பதாவது என்று துரத்திக் கண்டடைந்தது தான் க்ராஃப்ட் வொர்க் மேன் மெஷின் ஆல்பம்.ஆயிரம் முறையாவது கேட்டிருப்பேன்.இன்னும் கேட்பேன்.

இவர்களுக்கென்றே தனியான ரசிகர் குழுமங்கள் உலகமெங்கிலும் இருக்கின்றன.ஒரு விதமான எலக்ட்ரானிக் தியான மந்திரம் தான் இந்த ஆல்பம்.இவர்களை http://www.kraftwerk.com  என்னும் வலைதளத்திலும் http://en.wikipedia.org/wiki/Kraftwerk விக்கிபீடியாவிலும் மேலதிகம் அறிந்து கொள்ளலாம்.

திருக்குறளை மெல்ல என் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்யலாம் என்று கடந்த வாரம் ஒரே யோசனை.சில தகவல்கள்.நான் ஸ்கூல் முடிக்கும் வரை ஈசியாக இரண்டு நாலு மார்க்கு கிடைக்குமே என்று பஸ்முட்டி ரயில்முட்டி மனப்பாடம் செய்தேனே ஒழிய அப்போதெல்லாம் திருக்குறள் மீது பெரும்ப்ரியம் ஏதும் இருந்த நினைவில்லை.சும்மா சொல்லிக்கொள்வேன்.ஆகா… உலகப் பொதுமறை…திருக்குறள்.எந்த மொழியிலும் இதற்கு ஈடு இணை இல்லை என்றெல்லாம். ஆனால் உள்ளே அப்படி ஏதும் பாண்டித்யம் இருந்ததில்லை.

மெல்ல வாசிப்பின் அடுத்த கட்டங்களுக்குச் செல்ல ஆரம்பித்த பிற்பாடு திருக்குறள் என்னை வேறோரு இடத்தில் அமர்த்தி வசீகரித்தது என்று தான் சொல்வேன்.திருக்குறள் என்றதும் எனக்கு சிலாக்கியம் எதுவென்றால் அது எழுதப்பட்ட காலம் மற்றும் அதன் சிக்கன சின்னஞ்சிறு வடிவம்.நண்பர்களுக்குள் பேசிக்கொள்ளும் போது வேடிக்கையாகச் சொல்வேன்.ட்விட்டர் எஸ்.எம்.எஸ். இவற்றை எல்லாம் முதலில் டிசைன் செய்தவர் வள்ளுவர் தான் என்று.

திருக்குறளுக்குப் பல உரைகள் காணப்பெறுகின்றன.எது பெரிது சிறிதென்பது அல்ல இங்கே பேசுபொருள்.சில வார்த்தையாடல்கள் வள்ளுவரின் மொழிக்கூர்மையைப் பெரிதும் உவக்கச் செய்கின்றன.சத்தியத்துக்கு அந்த வார்த்தைகளிலிருந்து அத்தனை எளிதில் கடந்து சென்று விட முடிவதே இல்லை.சமீபத்தில் என் குழந்தைகளுக்கு பத்தே பத்து குறள்களை முதலில் பொருளோடு மனனம் செய்து பழக்குவதற்காக முக்கியமென்று நான் கருதும் பத்து குறள்களைச் சேகரம் செய்து கொண்டிருந்தேன்.அப்படிச் செய்கையில் வரிசையாகப் புரண்டோடிக் கொண்டிருந்த பார்வை  ஒரு  குறளைப் பார்த்ததும் சட்டென்று நின்றது.

நனவென ஒன்றில்லை ஆயின் கனவினால்
காதலர் நீங்கலர் மன்.

இதற்கு மு.வ எழுதிய உரை

நனவு என்று சொல்லப்படுகின்ற ஒன்று இல்லாதிருக்குமானால், கனவில் வந்த காதலர் என்னை விட்டுப் பிரியாமலே இருப்பர்.

 நனவென ஒன்றில்லை என்பதனை மட்டும் எடுத்துக் கொள்கிறேன்.நனவு என்றே எதுவுமில்லை என்னும் சொல்லாடல் என்னைப் பயித்தியமாக்குகிறது.

எந்த இரவின்
யார் கனவின்
உபநடிகன் நான்..?

என்று எனது கனவின் உபநடிகன் கவிதைத் தொகுதியில் எழுதியிருப்பேன்.அப்படி யாராவது அறிவித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்..?எல்லாமே கனவு என்று முடிவது எத்தனை அழகானது..?அப்படி முடிந்தால் மட்டுந்தான் அது முடிவதாகாது. மரணத்தை வெறுக்கும் யார்க்கும் இத்தனை சர்க்கரை தடவிய வாக்கியம் வேறேதும் இராது. நனவென ஒன்றில்லை.எல்லாம் கனவு.

ஆசையே அலைபோலே
https://www.youtube.com/watch?v=t5cPpM4Q-wo
இந்தப் பாடல் தமிழ்த்திரைப் பாடல்களில் ஒரு அபூர்வம்.

1958 இல் வெளியானது இந்தப் பாடல்.இந்தக் கணத்தில் கிட்டத் தட்ட 56 ஆண்டுகளைக் கடந்து ஒலித்துக் கொண்டிருக்கிறது.திருச்சி லோகநாதனின் தாமிரக் குரலில் இந்தப் பாடல் காந்தர்வம் மனம் மயக்கும்.

ஆசையே அலைபோலே நாமெலாம் அதன்மேலே
ஓடம்போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே! (ஆசை)

பருவம் என்னும் காற்றிலே
பறக்கும் காதல் தேரிலே
ஆணும் பெண்ணும் மகிழ்வார்
சுகம் பெறுவார் அதிசயம் காண்பார்!
நாளை உலகின் பாதையை இன்றே யார் காணுவார்? (ஆசை)

வாழ்க்கை எல்லாம் தீர்ந்ததே
வடிவம் மட்டும் வாழ்வதேன்
இளமை மீண்டும் வருமா
மணம் பெறுமா முதுமையே சுகமா!
காலம் போகும் பாதையை இங்கே யார் காணுவார்? (ஆசை)

சூறைக்காற்று மோதினால்
தோணி ஓட்டம் மேவுமோ
வாழ்வில் துன்பம் வரவு
சுகம் செலவு இருப்பது கனவு!
காலம் வகுத்த கணக்கை இங்கே யார் காணுவார்? (ஆசை)

இதில் வாழ்நாளிலே என்னும் போது லேசாய்க் குரலை இறக்கிச் சின்ன விளையாட்டைச் செய்திருப்பார் லோகநாதன். அடுத்து சரணத்தை ஆரம்பிக்கையில் ஸ்தாயி கூடும்.ஆணும் பெண்ணும் மகிழ்வார் என்று சொல்கையில் சின்னதாய் ஒரு சந்தோஷம் படரும்.அதிசயம் காண்பார் என்பதை சற்றே வேகமாய்க் கடப்பார்.நாளை உலகின் பாதையை இங்கே யார் காணுவார் என்று வினவுகையில் சின்னதாய் ஒரு எச்சரிக்கைத் தொனியும் விரவிக் கிடப்பதைக் காணலாம். ஒட்டுமொத்தமாய் லோகநாதனின் குரல் மூன்று விதமாய் ஏறி சமனாகி இறங்கி மாறி மாறி வித்தை புரிந்திருக்கும்.கேவி மகாதேவனின் இசையில் கவியரசு கண்ணதாசனின் வரிகள் இப்பாடலை என்றும் உயிர்த்திருக்க வைக்கிறது.

 இதன் மூன்றாவது பத்தியை உற்று நோக்கலாம்.காட்சியில் எஸ்.எஸ்.ராஜேந்திரன் இன்னபிறர் படகில் சவாரி செய்துகொண்டே பாடுவது போல அமைந்திருக்கும்.இதன் ஈற்று வரிகளில் இருக்கும் “”இருப்பது கனவு”” என்னும் வரியை வள்ளுவனின் “நனவென ஒன்றில்லை”என்பதோடு பொருத்திப் பார்த்தால் என்னே தமிழ் என் தமிழ் என்று நெஞ்சம் இறுமாப்படைகிறது.

இன்னும் தியானிக்கலாம்

அன்போடு

ஆத்மார்த்தி

Filed in: கிளிஷே - தொடர்கள்/தொடர்கதைகள், செப்டம்பர் மாத இதழ்

Recent Posts

Bookmark and Promote!

One Response to "மௌனம் தியானம் பிரார்த்தனை – ஆத்மார்த்தி"

  1. MK குமார் says:

    அருமை நண்பரே..

    தொடர்ந்து வாசிக்கக் காத்திருக்கிறோம்.

Leave a Reply

Submit Comment